புதுச்சேரி அருகே மீன் விற்பது போல் நடித்து, வீட்டைத் துல்லியமாக நோட்டமிட்டு சினிமா பட பாணியில் 45 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடிய மீன் வியாபாரியைப் போலீசார் 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், திருடிய நகைகளைக் கடலூரில் உள்ள நகைக்கடையில் விற்று உருக்கியதுடன், மற்றொரு வீட்டிலும் கைவரிசை காட்டியது அம்பலமாகியுள்ளது.
புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் (41). மும்பையில் தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முகுந்தவதி (31) மற்றும் இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சினிமா பாணி கொள்ளை:
நேற்று முன்தினம் முகுந்தவதி வீட்டைப் பூட்டிவிட்டு, அதே பகுதியில் உள்ள குட்டி ஆண்டவர் கோயிலுக்கு உறவினருடன் சென்றுள்ளார். இரவு வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
மீன் வியாபாரியின் கைவரிசை அம்பலம்: புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி அன்பரசன் (35) என்பவர் மீது சந்தேகம் வலுக்கவே, அவரைப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது
நோட்டமிட்ட நட்பு: அன்பரசன் அப்பகுதியில் பைக்கில் சென்று மீன் மற்றும் இறால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது பொதுமக்களிடம் இன்முகத்துடன் பழகி, அவர்களது சொத்து மற்றும் பண விவரங்களை மறைமுகமாக ஆராய்ந்துள்ளார். அந்தவகையில் விஜயேந்திரனுடனும் நட்பாகப் பழகி, அவரது வீட்டிற்குச் சென்று வருவதுமாக இருந்துள்ளார்.
சாவி இருக்கும் இடம்: விஜயேந்திரன் வீட்டின் பீரோ சாவிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக நோட்டமிட்ட அன்பரசன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தைப் பார்த்து சாவியை எடுத்து வீட்டைத் திறந்து நகை மற்றும் பணத்தைத் திருடியுள்ளார். திருடிய நகைகளைத் தனது மீன் ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரியிலேயே மறைத்து வைத்துள்ளார்.
கடலூரில் விற்று உருக்கிய தில்லுமுல்லு: விசாரணையில், திருடிய நகைகளில் 10 பவுனைத் தனது தோழி மாலதி என்பவரின் மூலம் கடலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்றுள்ளதும், அந்த நகைக்கடைக்காரர் திருட்டு நகை என அடையாளம் தெரியாதவாறு அவற்றை உருக்கிவிட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த மே மாதத்தில் அதே ஊரைச் சேர்ந்த நந்தினி என்பவரது வீட்டிற்குள்ளும் இதேபோல் புகுந்து 15 பவுன் நகைகளைத் திருடியதாக அன்பரசன் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த நகையை விற்ற பணத்தில் ரூ.3.50 லட்சத்தில் தனது லாரியைப் பழுதுபார்த்ததுடன், இன்சூரன்ஸ் கட்டியுள்ளார்; மேலும் ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எஸ்பி பாராட்டு மற்றும் சிறை அடைப்பு: இதையடுத்து, போலீசார் அவரிடமிருந்து மீதமுள்ள 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரைப் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைத் கைது செய்த தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் காவல் துறப்பினரை சீனியர் எஸ்பி கலைவாணன் நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார். மீன் வியாபாரி ஒருவர் பொதுமக்களுடன் நட்பாகப் பழகி தொடர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
