மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கடந்த வாரம் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்கும் நோக்கில் இக்கொலையைச் செய்த சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த கல்புளிச்சான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருடைய மகன் சித்திக் (25). கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி இரவு இவர் செக்கானூரணி – விக்கிரமங்கலம் சாலையில் உள்ள குளத்துபட்டி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, மர்மக் கும்பல் ஒன்று இவரைச் சூழ்ந்து கொண்டு பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சித்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை ஜெய்கிந்த்புரம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), ராஜ்குமார் (21), பிரவீன் என்ற எழும்பன் (21), ஜெயசூர்யா (19), பிரசன்னா (27), ஆனையூரைச் சேர்ந்த சஞ்சய் (21), பழங்காநத்தத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (27) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை நேற்று இரவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 2024-ஆம் ஆண்டு மேலக்காலில் நடைபெற்ற விசேஷ வீடு ஒன்றில், திருமங்கலத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கும், கல்புளிச்சான்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான சித்தார்த் மற்றும் சித்திக் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக அன்று இரவே கல்புளிச்சான்பட்டியில் இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டதில் முத்தையா அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
முத்தையா கொலை வழக்கில் சித்தார்த் மற்றும் சித்திக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த விபரம் முத்தையாவின் நண்பர்களுக்குத் தெரியவந்துள்ளது. தங்களது நண்பன் முத்தையாவின் கொலைக்குப் பழிக்குப்பழி வாங்கக் காத்திருந்த இந்த 8 பேர் கொண்ட கும்பல், கடந்த 28-ஆம் தேதி சமயம் பார்த்து சித்திக்கை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் போலீசார் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
