குடும்பக் கஷ்டத்திற்காகச் சவூதி அரேபியா சென்றுவிட்டு ஊர் திரும்பிய கணவனை, தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருப்பதாகக் கருதி மது குடிக்க வைத்து மாடியில் இருந்து தள்ளியும், பின்னர் நரம்பில் ‘ஹார்பிக்’ திரவத்தைச் செலுத்தியும் மனைவி தன் காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விபரங்கள் வருமாறு:
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நியால்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தைனி பிரசாந்த் (35). இவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பல ஆண்டுகளாகச் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சந்தியா. கணவன் வெளிநாட்டில் இருந்த இடைவெளியில், சந்தியாவிற்கு நிஜாமாபாத் இந்திராபூர் காலனியைச் சேர்ந்த மிருகூரி அனில் என்ற இளைஞருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு ஏற்பட்டுள்ளது.

மாடியில் இருந்து தள்ளிக் கொலை முயற்சி:
இந்த நிலையில், கடந்த ஜூன் 27-ஆம் தேதி பிரசாந்த் சவூதியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். கணவனின் வருகை தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதிய சந்தியாவும், அவரது காதலன் அனிலும் பிரசாந்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். இதற்குச் சந்தியாவின் நண்பனான கந்தி வெங்கடசாய் என்பவனின் உதவியை நாடினர்.
திட்டத்தின்படி, ஜூன் 29 அன்று வெங்கடசாய் பிரசாந்தை அவரது வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று மது குடிக்க வைத்துள்ளான். பிரசாந்த் முழு போதையில் ஆழ்ந்ததும், வெங்கடசாய் அதுகுறித்து சந்தியாவிற்குத் தகவல் கொடுத்துள்ளான். உடனே மாடிக்கு வந்த சந்தியா, அனில் மற்றும் வெங்கடசாய் ஆகிய மூவரும் சேர்ந்து பிரசாந்தை மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரசாந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, கணவன் போதையில் கீழே விழுந்துவிட்டதாக நாடகமாடிய சந்தியா, அவரை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.
நரம்பில் பாய்ந்த ‘ஹார்பிக்’ – கொடூரக் கொலை:
மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அன்றைய தினமே இரவில் பிரசாந்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர். மருத்துவமனையில் பிரசாந்தின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்துகளைச் செலுத்துவதற்காக நரம்பில் குழாய் (IV Cannula) பொருத்தப்பட்டிருந்தது.
இதனைப் பயன்படுத்திய அந்த மூவர் கும்பல், பிரசாந்தின் கையில் இருந்த அந்த நரம்புக் குழாய் வழியாக மயக்க மருந்து ஊசிகளையும், அத்துடன் ‘ஹார்பிக்’ டாய்லெட் கிளீனர் கலந்த திரவத்தையும் நேரடியாக ரத்தத்தில் ஏற்றியுள்ளனர். ஆபத்தான இரசாயனம் ரத்தத்தில் கலந்ததால் பிரசாந்த் வலியால் துடிதுடித்துள்ளார். உடனே அவரை கட்டிலில் இருந்து கீழே தள்ளி, மூச்சு விட முடியாமல் அமுக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
போன் ஆடியோவால் அம்பலமான ரகசியம்:
கொலைக்குச் சாதாரண விபத்து என்ற வண்ணம் பூச முயன்றனர். ஆனால், மகன் வெளிநாட்டில் இருந்து வந்தது, அவனுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றது என எதையுமே மருமகள் சந்தியா தனக்குத் தெரிவிக்காததால், பிரசாந்தின் தாய் சியாமளாவிற்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் எஸ்.ஐ சுஸ்மிதா ஆகியோர் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள், போன் அழைப்பு விவரங்களை வைத்து விசாரணை நடத்தினர். அதில், பிரசாந்த் மது அருந்தும்போது சந்தியா வெங்கடசாய்க்குப் போன் செய்து, “நீ என்ன செய்வாய் என்று எனக்குத் தெரியாது, அவன் முழு போதையில் விழ வேண்டும். ஒரு பாட்டில் போதாவிட்டால் இன்னொன்று வாங்கித் கொடு” என்று பேசிய அதிர்ச்சியூட்டும் ஆடியோ பதிவு போலீசாருக்குக் கிடைத்தது.
இதனை வைத்து வெங்கடசாயை மடக்கிப் பிடித்த போலீசார் அவனிடம் தனியாக விசாரணை நடத்தியதில், கொலை விபரங்கள் அனைத்தும் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்தன. தொடர்ந்து மனைவி சந்தியா, காதலன் அனில் ஆகியோரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
