Homeசெய்திகள்க்ரைம்சவுகார்பேட்டையில் துணிகரம்: நகை பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது

சவுகார்பேட்டையில் துணிகரம்: நகை பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது

-

- Advertisement -

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்கம் உருக்கும் பட்டறைக்குள் புகுந்து, கத்தி முனையில் 1 கிலோ 400 கிராம் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், கைதான ஒருவரின் மாமா வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சவுகார்பேட்டை

we-r-hiring

முகமூடி அணிந்து புகுந்த கும்பல்
​சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் அங்கீத் திலீப் மோர் (26). இவர் சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள தனது மாமா பிரவீனுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி உருக்கும் பட்டறையை கடந்த 7 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். நேற்று மதியம் அங்கீத் மற்றும் அவரது உறவினர் அக்ஷித் (26) ஆகியோர் பட்டறையில் இருந்தனர். அப்போது உசேன், சாஜித் ஆகிய வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை உருக்குவதற்காக அங்கு வந்திருந்தனர். அந்த நேரத்தில், முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் கையில் பட்டாக் கத்திகளுடன் பட்டறைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

கத்திக்குத்து… சினிமா பாணி சேஸிங்!
​கொள்ளை கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கீத்தை கத்தியால் தாக்கிவிட்டு, பட்டறையில் இருந்த 1.400 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோட முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கீத் மற்றும் கடையில் இருந்தவர்கள், காயத்தையும் பொருட்படுத்தாமல் திருடன்… திருடன்… என சத்தமிட்டபடி கொள்ளையர்களைத் துரத்தினர்.
​பொதுமக்கள் உதவியுடன் கத்தியுடன் தப்பியோட முயன்ற கொள்ளையன் ஒருவனை மட்டும் மடக்கிப் பிடித்து, பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மூவர் கைது – தங்கம் பறிமுதல்
​பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், இக்கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்: ​ஆறுமுகம் (22) – லால்குடி, திருச்சி மாவட்டம். லோகேஷ் (23) – வால் டாக்ஸ் சாலை, சென்னை. ஹேராம் எTarget @ ரமணா (24). கைது செய்யப்பட்ட லோகேஷின் மாமா ரஜினி என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.400 கிலோ கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் முழுவதையும் போலீசார் மீட்டனர். மேலும், இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பின்னணி: 2023-ல் இதே பட்டறையில் DRI ரெய்டு!
​தற்போது கொள்ளை நடந்துள்ள இதே தங்கம் உருக்கும் பட்டறையில் (P.S Melting Shop), கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது, கடத்தல் கும்பலிடம் இருந்து சட்டவிரோதமாக நகைகளை வாங்கி இங்கு உருக்குவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், DRI துணை இயக்குனர் கௌரி சங்கர் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 4 அட்டைப் பெட்டிகள் மற்றும் ஒரு டிராவல் பேக்கில் இருந்த கடத்தல் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பட்டறைக்கு சீல் வைத்தனர்.

மேலும், அங்கு இருந்த 5 பேரை டி.நகர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததும் இந்த கொள்ளை சம்பவத்தின் மூலம் தற்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடத்தல் தங்கம் உருக்கப்படும் பின்னணி கொண்ட பட்டறையிலேயே, தற்போது பட்டப்பகலில் கத்தி முனையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் சவுகார்பேட்டை வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ