Homeசெய்திகள்அரசியல்அதிமுகவில் அடுத்த வெடி: "அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்!" - பதவி விலகலுக்குப் பின்...

அதிமுகவில் அடுத்த வெடி: “அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்!” – பதவி விலகலுக்குப் பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி

-

- Advertisement -

“அதிமுக இன்னும் நன்றாக இருக்க வேண்டும்; கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்” என்று கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி, அதிமுக

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளைத் துறப்பதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சித் தலைமையிடம் கடிதம் அளித்திருந்தனர். இந்த உட்கட்சிப் பூசல் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், சென்னையில் இருந்து இன்று கோவை திரும்பிய எஸ்.பி.வேலுமணி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

we-r-hiring

அவரது பரபரப்பான பேட்டியின் விபரம் வருமாறு:
எடப்பாடியாருக்காக உழைத்தவர்களுக்குப் பதவிகள் இல்லை!
தங்கள் பதவி விலகல் கடிதம் குறித்துப் பேசிய எஸ்.பி.வேலுமணி:
​”நாங்கள் எங்களது முடிவைக் கடிதத்தில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அதிமுகவிற்காக உழைத்தவர்கள், அந்தந்த மாவட்டங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே தங்களின் ரத்தத்தைச் சிந்தி உழைத்தவர்கள், எடப்பாடியாருக்காகக் களத்தில் நின்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால், அப்படிப்பட்ட உண்மை விசுவாசிகளுக்குக் கட்சியில் தகுந்த பதவிகள் வழங்கப்படவில்லை. அதனால் தான் நானும், அண்ணன் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ‘எங்களுக்கு எந்தப் பதவியும் வேண்டாம், கட்சியில் சாதாரணத் தொண்டர்களாகவே தொடர்கிறோம்’ என்று முடிவெடுத்துக் கடிதம் கொடுத்துள்ளோம். அதே வேளையில், நாங்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாகத் தொடர்ந்து நீடிப்போம்.”

“ஜாம்பவான்கள்” என்ற வார்த்தையின் நிஜ அர்த்தம் என்ன?
​தாம் முன்னதாகக் குறிப்பிட்ட ‘ஜாம்பவான்கள்’ என்ற வார்த்தை குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தமே வேறு. கட்சிக்காக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்து உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமிக்காகக் களத்தில் நின்று கட்சியை வளர்த்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். கட்சிக்காகப் பாடுபட்டவர்களுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் கொடுக்கவில்லை. அதற்கு ஏன் என்று அவர்களிடமே (தலைமையிடமே) நீங்கள் தான் பதில் கேட்க வேண்டும்” என்று தலைமை மீதுள்ள அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

மகளிர் அணி கூட்டப் புறக்கணிப்பு ஏன்?
​நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு: “அதிமுக மகளிர் அணி கூட்டத்திற்கு வளர்மதி எப்போதுமே எங்களை முறைப்படி கூப்பிடுவார். ஆனால் நேற்றைய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை. நேற்றைய கூட்டத்திற்கு முன்னதாகவே நாங்கள் எங்களுடைய பதவி விலகல் கடிதத்தைத் தலைமையிடம் ஒப்படைத்துவிட்டோம். நாங்கள் கடிதம் கொடுத்துவிட்ட காரணத்தினாலேயே நேற்றைய கூட்டத்திற்கு எங்களை அவர்கள் அழைக்கவில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.

​”அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்”
​பேட்டியின் நிறைவாகப் பேசிய வேலுமணி, “எங்களைப் பொறுத்தவரை கடிதத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டோம். எங்களின் ஒரே நோக்கம் இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, கட்சியில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமிக்குச் சுட்டிக்காட்டும் விதமாகத் தனது கோரிக்கையை முன்வைத்தார். ​கட்சியின் உச்சக்கட்டப் பொறுப்பில் இருந்த வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் இந்த அதிரடிப் பேட்டி, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

MUST READ