கோவை அருகே விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை யூரியாவை சட்டவிரோதமாகப் பதுக்கி, கேரளா பிளைவுட் நிறுவனங்களுக்குக் கடத்த முயன்ற கும்பலை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 118 டன் யூரியா, 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மதுக்கரை வட்டம், திருமலையாம்பாளையம் தம்மணம்பாளையம் பகுதியில் உள்ள ‘டெர்ரா பாலிமர்’ என்ற நிறுவனத்தில் விவசாயிகளுக்கான மானிய விலை யூரியா பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுக்கரை வட்டார வேளாண்மை அலுவலர் ஏ.நாகசுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த ஜூலை 4-ம் தேதி வேளாண்மை அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அங்குள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில், விவசாயப் பயன்பாட்டிற்காக அரசு வழங்கும் ‘பாரத் யூரியா’ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சோதனையிட்டதில், தலா 45 கிலோ எடை கொண்ட 2,637 மூட்டைகளில் இருந்த சுமார் 118.60 டன் யூரியா மற்றும் 234 காலி யூரியா பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிரவைக்கும் பின்னணி வெளிவந்துள்ளது. சத்தியமங்கலம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த மானிய விலை யூரியாவை கள்ளச்சந்தையில் இந்த கும்பல் வாங்கியுள்ளது. இந்த யூரியாவைப் பயன்படுத்தி ‘ரெசின்’ (Resin) எனப்படும் ஒட்டும் திரவத்தைத் தயாரித்து, கேரளா மாநிலத்தில் உள்ள பிளைவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கூடுதல் விலைக்கு விற்று சட்டவிரோதமாகக் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கத் திட்டமிட்டிருந்தது அம்பலமானது. இதையடுத்து, 118 டன் யூரியா மூட்டைகளுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 பெரிய லாரிகள் மற்றும் ஒரு ‘படா தோஸ்த்’ மினி லாரி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை (Civil Supplies CID) போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் உரக்கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இவ்வழக்கில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகளின் ஓட்டுநர்களான புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரமையா (35) மற்றும் சேலத்தைச் சேர்ந்த செல்வம் (33) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கடத்தல் கும்பலின் முக்கிய சூத்திரதாரிகளான கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் கே அலி நிலத்தின் உரிமையாளர் கே.எம்.பாலகிருஷ்ணன் லாரி உரிமையாளர் மகிபாலன் ஈரோட்டைச் சேர்ந்த வெள்ளியங்கிரி லட்சுமண சண்முகம் ஆகிய 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள இந்த 5 பேரையும் பிடிக்க பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய மானிய விலை உரத்தைக் கடத்திய இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் கும்பாபிஷேகத்தில் 16 பவுன் நகை கொள்ளை…5 பக்தர்கள் பாதிப்பு!
