திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதூர் கிராமத்தின் மதுரா கிராமமான எய்பாக்கம் கிராம எல்லையை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா ராஜபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.

நிலத்தடி நீர் பாதிப்பு; வீடுகள் அதிர்வு:
இந்தக் கல்குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் மண் மற்றும் கற்கள் தோண்டப்பட்டு வருவதால், எய்பாக்கம் உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கல் உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிகளால் அருகில் உள்ள வீடுகள் அதிர்வுக்குள்ளாகி விரிசல் ஏற்படுவதாகவும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் அதிவேகமாகச் செல்வதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
அடிப்படை வசதிகள் முடக்கம்:
இதுமட்டுமின்றி, கல்குவாரி லாரிகளின் தொடர் இயக்கத்தால் கிராமத்துச் சாலைகள் முற்றிலும் குண்டு குளியுமாக மாறியுள்ளன. இதன் காரணமாகக் கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லை என்றும், அவசரக் காலங்களில் 108 ஆம்புலன்ஸ் அல்லது ஆட்டோக்கள் கூட உள்ளே வர மறுப்பதாகவும் பொதுமக்கள் தங்களது அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டுள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த எய்பாக்கம் கிராம மக்கள், இன்று (ஜூலை 6) 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு கல்குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் புறப்பட்டனர்.
இரு மாவட்ட போலீசார் குவிப்பு – 3 மணி நேரப் பரபரப்பு:
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தங்களுக்கு நேரிடும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்துப் பொதுமக்கள் போலீசாரிடம் கண்ணீருடன் முறையிட்டனர்.
கல்குவாரி அமைந்துள்ள இடம் செங்கல்பட்டு (மதுராந்தகம் தாலுகா) மாவட்ட எல்லையிலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை (வந்தவாசி தாலுகா) மாவட்ட எல்லையிலும் இருந்ததால், பாதுகாப்பு கருதி இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் இந்தத் திடீர் போராட்ட முயற்சியால் வந்தவாசி எய்பாக்கம் எல்லைப் பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்தக் கல்குவாரியை அரசு உடனடியாக மூட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது
