தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. செ. ராஜேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு 7 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள் வருமாறு:
1. புதிய தலைவருக்கு வாழ்த்து
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களுக்கு இச்செயற்குழு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
2. தமிழக த.வெ.க. அரசுக்கு ஆதரவு மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு வாழ்த்து
தமிழக அரசியல் மாற்றங்களின்படி, த.வெ.க. தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைய மக்கள் ஆதரவு அளித்திருந்தாலும், அதைத் தடுக்க ஆளுநர் மூலமாக பா.ஜ.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. புறவாசல் வழியாக பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் ஆட்சி அமைவதைத் தடுக்கும் நோக்கில், திரு. விஜய் தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு அளிப்பதென கடந்த மே 5-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக்குழு எடுத்த முடிவை இக்கூட்டம் ஆமோதிக்கிறது.
இதன்படி, தமிழக த.வெ.க. அரசில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. செ. ராஜேஷ்குமார் (சுற்றுலாத்துறை அமைச்சர்), திரு. பெ. விஸ்வநாதன் (உயர்கல்வித்துறை அமைச்சர்) ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருப்பதற்கு இக்கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
3. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரச்சாரம்
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 அன்று, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கி ஒரு வார காலம் விழா கொண்டாட வேண்டும். அத்துடன், ‘நெஞ்சம் நிமிர், லஞ்சம் தவிர்’ என்ற முழக்கத்துடன் மாவட்டம் முழுவதும் ‘ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம்’ நடத்த இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
4. கட்சி மறுசீரமைப்பு மற்றும் ‘மண்டலக் காங்கிரஸ்’ உருவாக்கம்
’எஸ்.எஸ்.ஏ.-2′ திட்டத்தின்படி வட்டார, நகர, சர்க்கிள், பேரூராட்சி கமிட்டிகளை முற்றிலும் சீரமைக்க மாவட்டங்களுக்குப் பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்கள். மேலும், அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, வட்டார மற்றும் கிராம கமிட்டிகளுக்கு இடையில், ஐந்து வாக்குச்சாவடி குழுக்களுக்கு ஒரு ‘மண்டலக் காங்கிரஸ் கமிட்டி’ உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என மாவட்டத் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
5. அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி: உச்சநீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்தல்
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கும்பலால் சுமார் ரூ.7 முதல் ரூ.7.5 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது சிறப்பு விசாரணைக் குழு (SIT) மூலம் தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராமர் கோயிலை வைத்து 12 ஆண்டுகாலம் பா.ஜ.க. அரசியல் நடத்திய நிலையில், தற்போது அங்கே நடந்துள்ள கூட்டுக் கொள்ளை குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணை நடத்த வேண்டும். மேலும், தனியார் அறக்கட்டளை எனக் கூறித் தவிர்க்காமல், பொதுமக்கள் நன்கொடை விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் ராமர் கோயில் நிர்வாகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. பெட்ரோல், டீசல் விலை மற்றும் தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபம்
பா.ஜ.க. அரசு கடந்த 12 ஆண்டுகளில் கலால் வரி மூலம் 25 லட்சம் கோடி ரூபாய் வசூலித்து மக்கள் மீது சுமையேற்றியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் அரசு கஜானாவை நிரப்புகிறது. அதேநேரத்தில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இணையாகத் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைக்காமல் கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்குக் கண்டனம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முனையும் கர்நாடக அரசின் முயற்சி, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது மற்றும் நீதிமன்ற அவமதிப்பாகும். “தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்” என்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ப. மாணிக்கம் தாகூரின் கூற்றை இக்கூட்டம் வரவேற்கிறது. காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க கர்நாடக அரசின் இந்த முயற்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துப் போராடும் என்று இத்தீர்மானத்தின் மூலம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
