நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு முரண்பாடாக உள்ளது என்றும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே சட்டமன்றத்தில் தீர்மான நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
வாரம் ஒரு நிலைப்பாடு
சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தொகுதி மறுவரையறையின் போது மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதைச் சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆனால், இதற்கு முன்பாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி தோழமைக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியும், ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியும் செயல்பட்ட முதலமைச்சர், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பது முற்றிலும் முரண்பாடாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அம்பலமான நாடகம்
மத்திய அரசிடமிருந்து தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம் என்பது முதலமைச்சரின் தற்போதைய உரையின் மூலமாகவே அம்பலமாகிவிட்டதாகச் சாடியுள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே உறுதியளித்துள்ள நிலையில், அவரிடமே மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கபூர்வ நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் அரசு, இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்கள் மூலம் தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்பக் கூடாது எனக் குறிப்பிட்ட டிடிவி தினகரன், தமிழகம் மற்றும் மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
சம்பா சாகுபடி: மேட்டூர் அணை திறக்கும் தேதியை உடனே அறிவிக்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை!
