கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் (ஸ்ரீ திருவிக்கிரமசாமி) கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 5 பக்தர்களிடம் இருந்து மொத்தம் 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் நகரின் அடையாளமாகத் திகழும் இக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆன்மீக நிகழ்வைக் காணவும், சாமி தரிசனம் செய்யவும் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், ஐந்து வெவ்வேறு நபர்களிடம் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்து வீடு திரும்ப முயன்றபோதுதான் தங்களது கழுத்தில் இருந்த தங்க நகைகள் மாயமாகியிருப்பதை அறிந்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட 5 நபர்களும் அடுத்தடுத்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார்களின் அடிப்படையில், பக்தர்களிடம் இருந்து மொத்தம் 16 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்
ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், திருக்கோவிலூர் டி.எஸ்.பி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து தெரிவிக்கையில்: “நகை இழந்த நபர்கள் கும்பாபிஷேகத்தின் போது எந்தெந்தப் பகுதிகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை முழுமையாகக் கைப்பற்றி, சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர். மகா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்குச் சென்ற பக்தர்களிடம் 16 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இச்சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடையேயும் ஆன்மீகப் பக்தர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
