Homeசெய்திகள்மாவட்டம்சேலத்தில் பரபரப்பு: திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடைக்கு போலீஸ் திடீர் கட்டுப்பாடு – நிர்வாகிகளுடன் கடும்...

சேலத்தில் பரபரப்பு: திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடைக்கு போலீஸ் திடீர் கட்டுப்பாடு – நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம்!

-

- Advertisement -

சேலத்தில் இன்று மாலை நடைபெற உள்ள திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று காவல்துறையினர் திடீர் கட்டுப்பாடுகளை விதித்ததால், திராவிடர் கழக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

திராவிடர்

we-r-hiring

​திராவிடர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் வகையிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம், இன்று மாலை சேலம் கோட்டை மைதானத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

​இப்பொதுக்கூட்டத்திற்கு ஏற்கனவே காவல்துறையிடம் உரிய அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளைத் திராவிடர் கழகத்தினர் தொடங்கினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், வழக்கமாக மேடை அமைக்கப்படும் இடத்தில் அமைக்கக் கூடாது என்றும், தங்களது புதிய கட்டுப்பாடுகளின்படி மாற்று இடத்தில்தான் மேடை அமைக்க வேண்டும் என்றும் கூறி பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திராவிடர் கழக நிர்வாகிகள், காவல்துறையினரின் இந்த திடீர் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த போலீசார், “கடந்த இரண்டு மாதங்களில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படியே தற்போதைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மேடையை முன்புறம் சாலை ஓரமாகத்தான் அமைக்க வேண்டும்” என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மேடை அமைக்கத் தற்போது திடீரென மறுப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, திராவிடர் கழக நிர்வாகிகள் காவல்துறையினருடன் அங்கே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டை மைதானப் பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

​இருப்பினும், காவல்துறையினர் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததை அடுத்து, பரபரப்பான சூழலுக்கு மத்தியில் போலீசார் குறிப்பிட்ட மாற்று இடத்திலேயே தற்போது பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

MUST READ