சேலத்தில் நடைபெற்ற 14-வது தேசிய அளவிலான ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 28 தங்கம் உட்பட மொத்தம் 55 பதக்கங்களை வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற இந்தத் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறமையான வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழக அணியின் சார்பாக, கோவையில் உள்ள ‘ஆண்ட்லீ பிளாக் பெல்ட் அகாடமி’யில் பயிற்சி பெறும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 18 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் பிரிவு முதல் சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் ‘பூம்சே’ மற்றும் ‘கிரோகி’ ஆகிய தற்காப்புக் கலைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தி, 28 தங்கம், 15 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை வாரிக் குவித்து அசத்தலான சாதனை படைத்தனர்.
தேசிய போட்டியில் வென்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மலர் மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தத் தேசிய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்த மாணவர்கள் அடுத்ததாக தென்கொரியாவில் நடைபெற உள்ள சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் உயரிய தகுதியையும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஆண்ட்லீ பிளாக் பெல்ட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஆனந்த்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் அசாத்திய திறமை படைத்த வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்த தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக, டேக்வாண்டோ விளையாட்டிற்குத் தேவையான சென்சார் உள்ளிட்ட நவீன உபகரணங்கள், தரமான உள்கட்டமைப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் சிறப்பு பயிற்சி முகாம்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.
மேலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகும் வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகையை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிட வேண்டும் என்றும், இதுபோன்ற அரசு ஆதரவு கிடைத்தால் தமிழக வீரர்கள் உலக அரங்கில் தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
