HomeBreaking News"விஜய்க்கு தைரியம் இருக்கிறதா?" - சி.விஜயபாஸ்கர் குவாரி விவகாரத்தை முன்வைத்து த.வெ.க தலைவருக்கு தங்கத்தமிழ்ச்செல்வன் எம்பி...

“விஜய்க்கு தைரியம் இருக்கிறதா?” – சி.விஜயபாஸ்கர் குவாரி விவகாரத்தை முன்வைத்து த.வெ.க தலைவருக்கு தங்கத்தமிழ்ச்செல்வன் எம்பி நேரடி சவால்!

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குவாரி வழக்கில் மட்டும் 500 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. இப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர்கள் த.வெ.க-விற்கு வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா?” என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கத்தமிழ்ச்செல்வன்

we-r-hiring

​தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டிபட்டி அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவமனை மற்றும் வருசநாடு தர்மராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 150 மீட்டர் பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப் பணிகளைத் தேனி எம்பி தங்கத்தமிழ்ச்செல்வன் இன்று திறந்து வைத்தார். ​அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு அதிரடியாகப் பதிலளித்தார்.

திமுக எப்போதும் ‘ஸ்ட்ராங்’ தான்!
​’அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகிச் செல்வதால் திமுக பலவீனமடைகிறதா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்:
​”திமுக எப்போதும் போலவே மிகவும் பலமாகவும், ஸ்ட்ராங்காகவும் இருக்கிறது. எங்களுக்கு எதற்கு பலவீனம்? கட்சியை விட்டுப் போகிறவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான். வரக்கூடிய காலகட்டங்களில் எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக மிக பிரம்மாண்டமாக ஜெயித்து முன்னிலை வகிக்கும் என்பதை நாங்கள் நிரூபிப்போம்” என்றார்.

த.வெ.க தலைவர் விஜய்க்கு நேரடி சவால்
​’முன்னாள் அமைச்சர்கள் மீதான திமுக அரசின் வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கையா?’ என்ற கேள்விக்கு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையைப் பெற்றே ஆக வேண்டும் எனக் கூறிய தங்கத்தமிழ்ச்செல்வன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு நேரடியாகப் பல அரசியல் கேள்விகளை முன்வைத்தார்.

“அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எல்லோர் மீதுமே ஊழல் வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாகப் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் குவாரி வழக்கில் மட்டும் 500 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய சூழல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர்கள் உங்கள் கட்சிக்கு வந்தால், அவர்கள் மீது நீங்கள் வழக்குத் தொடுத்து நடவடிக்கை எடுப்பீர்களா மாட்டீர்களா? அப்படி நீங்கள் தைரியமாக நடவடிக்கை எடுத்தால் மட்டும்தான் விஜய் அவர்களின் ஆட்சி நல்ல ஆட்சி என்று நான் சொல்வேன். விஜய்க்கு அந்த தைரியம் இருக்கிறதா?” என சவால் விடுத்தார்.

வைகோவின் விமர்சனத்திற்குப் பதில்
​மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “தேர்தலுக்கு முன்பு வரை திமுகவை வைகோ மிக உயர்வாகப் புகழ்ந்து பேசினார். தேர்தலுக்குப் பிறகு உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவர், தங்களை ஏன் மறுதேர்தல் நடத்தச் சொல்கிறீர்கள், நாங்கள் திமுகவிலேயே இருந்து கொள்கிறோம் என்று பெருந்தன்மையாகக் கூறி திமுகவோடு இணைந்து செயல்படுகிறார்கள். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணன் வைகோ அவர்கள் தற்போது வசைபாடி வருகிறார். இதற்கு காலம்தான் தகுந்த பதில் சொல்லும்” என்றார்.

​விவசாயக் கடன் தள்ளுபடி:
​இறுதியாக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு பதிலளித்த தங்கத்தமிழ்ச்செல்வன், “75 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியவர்களுக்கு முழு கடன் தள்ளுபடி என்றும், மற்றவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்றும் ஒரு கணக்கு சொல்கிறார்கள். ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் பயிர்க்கடன் மற்றும் அதற்கான வட்டி என அனைத்தையுமே முழுமையாகத் தள்ளுபடி செய்து சாதனை படைத்தார். அதுபோன்ற ஒரு மாபெரும் மக்கள் நல ஆட்சியைத் தந்து, விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை விஜய் அவர்களால் நிறைவேற்ற முடியுமா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கூறி முடித்தார்.

MUST READ