HomeBreaking Newsதவெக அரசுக்கு ஆதரவு: லீமா ரோஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிமுகவில் வெடிக்கும் ‘டபுள்...

தவெக அரசுக்கு ஆதரவு: லீமா ரோஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிமுகவில் வெடிக்கும் ‘டபுள் ஸ்டாண்டர்ட்’ சர்ச்சை!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவளித்த மற்ற நிர்வாகிகள் மீது அதிரடி காட்டிய கட்சித் தலைமை, சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் மீது மட்டும் ஏன் மெத்தனம் காட்டுகிறது என்ற விமர்சனக் கணைகள் எடப்பாடி பழனிசாமியை நோக்கி பாயத் தொடங்கியுள்ளன.
லீமா ரோஸ்

பின்னணி என்ன?
​சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 144 பேர் ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது. இதில் திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிட்டு 60,795 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை 2,737 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய லீமா ரோஸ் மார்ட்டினும் ஒருவர். நடப்பு 2026 சட்டமன்றத் தேர்தலிலேயே மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராகக் களம் கண்டவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

அதிமுகவின் அதிரடி நடவடிக்கையும் முரண்பாடும்
​கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட 29 பேரை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், தவெகவுக்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடமும் கடிதம் அளிக்கப்பட்டது.
​ஆனால், இவ்வளவு பெரிய ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தபோதும், அந்தப் பட்டியலில் இருந்த லீமா ரோஸ் மார்ட்டின் மீது மட்டும் எந்தவொரு உட்கட்சி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் தற்போதும் அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்பு:
​நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த மகளிர் அணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எவ்வித தடையுமின்றி லீமா ரோஸ் மார்ட்டின் கலந்துகொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த லீமா ரோஸ், தவெக அரசுக்கு ஆதரவளித்தது குறித்துப் பேசுகையில், “தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் மிகவும் நன்றாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் கண்டிப்பாக மாற்றம் வரும், மகளிரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்று வெளிப்படையாகவே தவெக அரசைப் பாராட்டியிருந்தார். ​”யார் கண்ட்ரோலில் அதிமுக?” – மூத்த பத்திரிகையாளர் கேள்வி : இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான என். பொன்குமரகுருபரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில்

கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
​அவரது பதிவில், “தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வேலுமணி, தங்கமணி மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமி, தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த லீமா ரோஸின் பதவியை மட்டும் ஏன் இன்னும் பறிக்கவில்லை? அப்படியென்றால் கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது… கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியா, இல்லை லாட்டரி அதிபர் மார்ட்டினா?” என ‘டபுள்’ கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொண்டர்கள் மத்தியில் எழும் விவாதம்
​அதிமுகவுக்குள் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்படுகிறதா அல்லது செல்வாக்கு மிக்க நபர்களுக்கு ஒரு விதியும், மற்றவர்களுக்கு ஒரு விதியும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இப்புகார்கள், தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அரசியல் வட்டாரத்திலும் தற்போது பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள அக்மார்க் அரசியல் நகர்வுகள் என்ன என்பதை கட்சித் தலைமைதான் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தொண்டர்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

MUST READ