HomeBreaking News"சினிமா பஞ்ச் டயலாக்குகளால் அரசியல் செய்ய முடியாது!" - சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மதுரையில்...

“சினிமா பஞ்ச் டயலாக்குகளால் அரசியல் செய்ய முடியாது!” – சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மதுரையில் அதிரடி பேட்டி!

-

- Advertisement -

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக அரசுக்கான கால அவகாசம், திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசனின் விமர்சனங்கள், காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேட்டியின் விரிவான விவரங்கள் பின்வருமாறு:
கார்த்தி சிதம்பரம்

புதிய அரசுக்குக் கால அவகாசம் தேவை!
​”புதிய அரசு (தவெக அரசு) பதவியேற்று இன்னும் இரண்டு மாதங்கள் கூட நிறைவடையவில்லை. பெரும்பாலான அமைச்சர்கள் முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ளதால், நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு நிலைபெற அவர்களுக்குக் கால அவகாசம் தேவை. ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல. வரவிருக்கும் முதல் பட்ஜெட்டுக்குப் பிறகே இந்த அரசின் செயல்திட்டங்களை நாம் முழுமையாக மதிப்பிட முடியும்.
​அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2031-ல் தான் நடக்கும். எனவே, ஐந்து வருடங்களுக்கு விஜய் தலைமையில் ஆட்சி நீடிக்கும் என்பதால், ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.”

we-r-hiring

எழிலரசனுக்குத் தேசிய அரசியல் தெரியவில்லை!
​திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசனின் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்:
“திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசனுக்குத் தேசிய அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை. ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்திருக்கலாம்; ஆனால் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா என மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். ‘உங்களுக்கு எத்தனை முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்?’ என்று கேட்டால் அவர் என்ன செய்வார்? யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து பேச வேண்டும். சினிமா பஞ்ச் டயலாக்குகளை வைத்தே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கக் கூடாது, ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துப் பேச வேண்டும்.”

தவெக-வில் மற்ற கட்சியினரைச் சேர்க்கத் தேவையில்லை!
​”தற்போது அதிமுக தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் பலரும் தவெக-விற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். நீண்ட நாள் நீடிக்கக் கூடிய தலைவராக விஜய் இருக்கும் சூழலில் இந்தத் தாவல்கள் நடக்கின்றன. ஆனால், பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-விற்கு வருபவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. வாக்காளர்கள் தான் சிந்திக்க வேண்டும்; அவர்கள் எதற்காக ராஜினாமா செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

​இருப்பவர்களை வைத்தே ஐந்து ஆண்டுகள் தவெக-வால் ஆட்சி செய்ய முடியும். ஆட்சியை யாரும் கவிழ்க்கவும் முடியாது. என் அட்வைஸை என் கட்சியிலேயே யாரும் கேட்பதில்லை, பக்கத்து கட்சியா கேட்கப் போகிறது? இருந்தாலும், யாரையும் நீங்கள் சேர்க்க வேண்டாம், யாரும் உங்களை விட்டுப் போகவும் வேண்டாம் என்பதுதான் என் கருத்து.”

​எரிபொருள் விலை & ஆளுநர் விவகாரம்:
​எரிபொருள் விலை: “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பயன் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் விலையைக் குறைக்கத் தொடங்கியுள்ளதால், அரசு நிறுவனங்களும் விலையைக் குறைக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் நோக்கில் மக்களிடம் இருந்து பணத்தை உறிஞ்சுவது தவறு.”

ஆளுநர் ஆய்வு:
“ஆளுநருக்கு வைகை ஆற்றைப் பற்றி ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரமும் (Authority) கிடையாது. பாஜக நியமித்துள்ள அனைத்து ஆளுநர்களும் தங்களின் அரசியல் சாசன அதிகார வரம்பை மீறித்தான் செயல்படுகிறார்கள். அவர்கள் அப்படிச் செயல்படாமல் இருக்க வேண்டும்.”

வழக்கறிஞர் நியமனத்தில் ஊழலா?
​அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, “அதுபோன்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தற்போது வரை நியமிக்கப்படவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும்” என்றார்.

அதிமுக குறித்து கார்த்தி சிதம்பரம்:
​”அதிமுக என்ற கட்சி தமிழகத்தில் வலுவாக இருக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட அந்தப் பெரிய கட்சி அழிவது எனக்குச் சரியாகப்படவில்லை. அது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல.”

MUST READ