அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலின் நிர்வாகப் பொறுப்புகளை ‘ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளை கவனித்து வருகிறது. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில், சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கையாடல் செய்யப்பட்டதாக நாளிதழ்களில் வெளியான செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

சிபிஐ விசாரணை கோரி மனு
செய்தி நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், இந்த முறைகேடு புகார் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் மோஹித் அசோக் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது ஏன்?
இந்த மனு இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், இதனை விசாரிக்க இயலாது எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டதாவது:
”இதே போன்ற புகார்கள் மற்றும் கோரிக்கைகளுடன் கூடிய வழக்கு ஒன்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது. எனவே, அதே விவகாரம் தொடர்பாக இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.”
உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருப்பதைக் சுட்டிக்காட்டி, அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
