கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ரூ.75 ஆயிரம் வரம்பு உழவர்களுக்கு ஏமாற்றம்
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி சோமசுந்தரம், அங்குள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.85 ஆயிரம் பயிர்க்கடன் வாங்கியிருந்தார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, தனது கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், தவெக அரசு இரு முறை கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிட்ட போதும், ரூ.75 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. வெறும் பத்தாயிரம் ரூபாய் வித்தியாசத்தில் தனக்கு கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
போராட்டம் முடிந்து வந்த உழவரின் சோக முடிவு
விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் கடந்த 4-ஆம் தேதி உழவர் அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டத்தில் சோமசுந்தரமும் கலந்துகொண்டார். போராட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய அவர், அடுத்த சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் மிக முக்கியக் காரணம்.
வாக்குறுதியை நிறைவேற்ற அன்புமணி வலியுறுத்தல்
தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று நம்பியிருந்த லட்சக்கணக்கான உழவர்கள் தற்போது கடுமையான ஏமாற்றமடைந்துள்ளனர். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடியும் பொய்த்து, டெல்டா விவசாயிகளின் மன உளைச்சல் மேலும் அதிகரித்துள்ளது. எனவே, தவெக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தவாறு, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், கடன் சுமையால் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
