
மேகதாது அணை விவகாரத்தில் , தமிழக விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாலைவனமாகும் அபாயத்தில் காவிரி மாவட்டங்கள்
“காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக் கூடிய மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டி விடுமோ? என்ற அச்சமும், பதற்றமும் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், மேகதாது அணையைத் தடுப்பதற்கான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு போதிய அளவில் மேற்கொள்ளாதது கவலையளிக்கிறது.
மறுபுறம், கர்நாடக அரசோ அடுக்கடுக்கான இலக்குகளை நிர்ணயித்து, அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கோரியதுடன், அடுத்தகட்டமாக அணை கட்டப்படவுள்ள வனப்பகுதியில் ஆய்வு நடத்தவும் அனுமதி அளித்துள்ளார்.
விழிப்புணர்வு பரப்புரை பயணம்
இதுகுறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை, தமிழகத்திற்குள் காவிரி நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் தொடங்கி பூம்புகார் வரை விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டேன்.
ஓகனேக்கல், மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளையும் பொதுமக்களையும் சந்தித்துப் பேசினேன். அவர்களின் ஒற்றை கோரிக்கை, “மேகதாது அணையைத் தடுக்க வேண்டும்” என்பதுதான்.
”கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு ஒப்பந்தத்தையும், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காமல் கர்நாடகம் செய்த துரோகங்களை தமிழக விவசாயிகள் இன்னும் மறக்கவில்லை. எனவே, கர்நாடக ஆட்சியாளர்களின் வெற்று வாக்குறுதிகளை நம்ப அவர்கள் தயாராக இல்லை.”
தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இருந்தாலும், அவர் தவறாக வழிநடத்தப்படுவதாகவே விவசாயிகள் கருதுகின்றனர். மேகதாது அணைக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, சற்றும் தொடர்பில்லாத வகையில் “புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும்” என்ற திருத்தம் சேர்க்கப்பட்டது. இது கர்நாடகாவிற்கே சாதகமாக அமையும் என உழவர்கள் அஞ்சுகின்றனர்.
அணை கட்டும் முயற்சியில் கர்நாடகம் சதித் திட்டங்களுடன் செயல்படும் போது, அதற்கு எதிராக வலுவான அரசியல், சட்ட ஆயுதங்களை ஏந்தாமல், நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்பதற்கு ஒப்பானது. இந்த உத்தியைத் தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பா.ம.க.வின் கோரிக்கை
புதிய அரசு பதவியேற்ற பிறகு, சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இந்த அலட்சியப்போக்கு காவிரி உரிமைகளைக் காக்க உதவாது. கர்நாடக அரசு காட்டும் தீவிரத்தை விட பல மடங்கு தீவிரத்தைத் தமிழக அரசு காட்ட வேண்டும்.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகளை எடுக்க, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
