“பள்ளிகளில் அரசியல் கட்சியினர் நுழைந்து ஆய்வு செய்வது தொடர்பாகத் தமிழக அரசு விரைவில் ஒரு முறையான முடிவை எடுக்க உள்ளது” என்று பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். மேலும், உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் எந்தவிதமான குளறுபடிகளும் நடைபெறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் (SRM) மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு முக்கிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி இல்லை
உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த சந்திரமோகன் கூறியதாவது,”தகுதித் தேர்வு எழுதிய தேர்வர் ஒருவர், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தனது பெயர் எழுத வேண்டிய இடத்தில் தவறுதலாகப் பதிவு எண்ணைக் குறிப்பிட்டுள்ளதாகத் தேர்வாணையத்திடம் முறையிட்டார். அந்தத் தேர்வரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தேர்வாணையம் அவரது சான்றிதழ்களை முழுமையாகச் சரிபார்த்து, அவருக்குத் தேர்வு எழுத வாய்ப்பு அளித்தது. எனவே, தேர்வு நடத்தும் முறையிலோ அல்லது மதிப்பெண் கணக்கீட்டிலோ எந்தவொரு குளறுபடிகளும் நடைபெறவில்லை.” தொடர்ந்து, பள்ளிகளில் தவெக கட்சியினர் ஆய்வு செய்வது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இது தொடர்பாக அரசு விரைவில் உரிய முடிவு எடுக்க உள்ளது” என்று அவர் பதிலளித்தார்.

தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தற்போது மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல் தாள் தேர்வினை எழுதுவதற்காக மொத்தம் 222 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 61 ஆயிரத்து 386 தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். அதேபோல, இரண்டாம் தாள் தேர்விற்காக மாநிலம் முழுவதும் 613 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 743 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, முதல் தாள் தேர்விற்காக 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 3,575 தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். மேலும், இரண்டாம் தாள் தேர்வினை எழுதுவதற்காகச் சென்னையில் 38 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு, அவற்றில் 10,251 தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வுகள் எவ்வித தடையுமின்றி முறையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளுடன் நடைபெற்று வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
