தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், படுகொலைகளும் நடந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று காலை சென்னை ராஜ்பவனில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோருடன் சென்று ஆளுநரைச் சந்தித்த பின், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஆளுநரிடம் அடுக்கடுக்கான புகார்கள்
”ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோரை அரசு பொறுப்புகளில் பணியமர்த்தியிருப்பது தொடர்பாக ஆளுநரிடம் ஆவணங்களை அளித்துத் தெரிவித்துள்ளோம். கடந்த கால அரசுக்கும், தற்போதைய புதிய அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. முதலமைச்சர் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற எங்களது கருத்துக்களை ஆளுநரிடம் முன்வைத்துள்ளோம்.
புதிய ஆட்சிப் பொறுப்பேற்று 55 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், படுகொலைகளும் அரங்கேறியுள்ளன. எல்லாவற்றையும் உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், ஆளுங்கட்சியினரே பல தவறுகளைச் செய்கிறார்கள், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றுதான் நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.
ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலா?
ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பே ஆளுங்கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் காமராஜரைத் தொடர்பு கொண்டு பல வேலைகளைப் பார்த்தார்கள். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். தற்போதைய சூழலில் ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் வர வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு செய்தாலும் குற்றம் குற்றம்தான். கடலில் பீர் குடித்துக் கொண்டே வெளியே வருவது போன்ற வீடியோக்கள் எல்லாம் வெளியாகின்றன. இதன் மீது முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதுதான் எங்களின் கேள்வி.
பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்த போது, அம்மாநில ஆளுநர் எடுத்த முயற்சியால் அனைத்தும் சரி செய்யப்பட்டது என்று இன்று நாங்கள் பேசும்போது கூட ஆளுநர் குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநர் செல்லும் இடங்களில் ஆய்வு செய்வதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, அதில் மத்திய அரசு பற்றித் தவறாகக் குறிப்பிட்டிருந்தாலும் ஆளுநர் அப்படியே வாசித்துக் கொடுத்து அரசுக்கு ஒத்துழைப்பு தந்துள்ளார். அப்படி ஒத்துழைப்பு கொடுக்கும் ஆளுநரைக் கொச்சைப்படுத்துவது சரியல்ல.
தவெக பின்புலமாக பாஜக-வா?
தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) பின்புலமாக பாஜக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. அப்படி நாங்கள் தவெக-விற்குப் பின்புலமாக இருந்தால், தற்போது ஏன் இந்த அளவிற்கு அவர்கள் மீது புகார்களைக் கொடுக்கப் போகிறோம்? அமைச்சர் நிர்மல் குமார் மீது கூட பல்வேறு புகார்கள் இருக்கின்றன” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
