திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடன் சுமை காரணமாக அடகு நகை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்களது 200 சவரன் நகைகளைத் திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அடுத்த வடுகசாத்து ஊராட்சிக்குட்பட்ட சேர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (30). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, சுபாஷினி என்ற மனைவியும், 6 மாதக் கைக்குழந்தையும் உள்ளனர். அஜித்குமார் கடந்த 5 ஆண்டுகளாக வடுகசாத்து கிராமத்தில் ‘சுமதி பொன் வெள்ளி அடகு கடை’ என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வந்தார். இப்பகுதியைச் சுற்றியுள்ள வடுகசாத்து, அரையாளம், தச்சூர், சேர்ப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது விவசாயத் தேவைகளுக்காகச் சுமார் 200 சவரன் தங்க நகைகளை இந்த அடகுக்கடையில் அடமானம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மன உளைச்சலில் தற்கொலை
நகை அடகுத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, அஜித்குமாருக்குக் கடுமையான கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த ஆரணி தாலுக்கா போலீசார், உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் முற்றுகை & போலீஸ் நடவடிக்கை
அடகுக்கடை உரிமையாளர் அஜித்குமார் தற்கொலை செய்துகொண்ட தகவல் பரவியதைத் தொடர்ந்து, அங்கு நகைகளை அடமானம் வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திடீரென ‘சுமதி பொன் வெள்ளி அடகு கடையை’ முற்றுகையிட்டனர். தங்களது நகைகளின் நிலை என்னவென்று தெரியாததால், அவற்றை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில்
“நாங்கள் அனைவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். விவசாயத் தொழிலுக்காகவும், குடும்பத் தேவைக்காகவுமே நகைகளை இங்கு வைத்திருந்தோம். தற்போது உரிமையாளர் இறந்துவிட்டதாகக் கூறுவதால் எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நகைகள் கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அரசு எங்களின் நகைகளை மீட்டுத் தர வேண்டும்.” என உருக்கமாகத் தெரிவித்தனர். இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி தாலுக்கா போலீசார், முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திச் சமரசம் செய்தனர். உரிய ஆவணங்கள் வைத்துள்ள பொதுமக்களின் நகைகள் முறைப்படி மீட்டுத் தரப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, பூட்டிக்கிடந்த சுமதி பொன் வெள்ளி அடகுக்கடையைத் திறந்து, உள்ளே இருந்த கணக்குப் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களைப் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
