“தமிழக அரசியலில் இதுவரை காணாத வகையில் குதிரை பேரங்களும், கட்சி உடைப்புகளும் நடந்து வருகின்றன. காலையில் ஒரு கட்சி, மாலையில் ஒரு கட்சி என மாறும் அவலம் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையான வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கே.எம்.பி. திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின், செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து 1500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

“கட்சி தாவல் வேறு; கட்சி உடைப்பு வேறு” செய்தியாளர் சந்திப்பில் கி. வீரமணி பேசியதாவது:
”தமிழகத்தில் தற்போது திட்டமிட்டு ‘கட்சி உடைக்கும்’ வேலைகள் நடக்கின்றன. கட்சித் தாவல் என்பது தனிநபர் சார்ந்தது; ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஒரு கட்சியை உடைப்பது என்பது வேறு. இதனால் ஜனநாயகம் சந்திக்கப் போகும் ஆபத்தை இன்னும் யாரும் உணரவில்லை. வடக்கே வீசும் மோசமான அரசியல் காற்று இப்போது தமிழகத்திற்கும் வந்துவிட்டது. சிபிஐ வழக்குகளில் சிக்கியவர்களை எல்லாம் தங்களது கட்சிகளில் சேர்த்துக் கொள்கிறார்கள்.”
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் ஓட்டைகள்:
அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே கோளாறுகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். “தற்போது எம்.எல்.ஏ.-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிகளில் சேர்கிறார்கள். இதனால் தேவையின்றி இடைத்தேர்தல்கள் திணிக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, இந்தச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நீக்கி, சட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்காகத் திராவிடர் கழகம் சார்பில் கிளர்ச்சி நடத்துவோம்” என்றார்.
பொதுக்குழுவின் முக்கிய முடிவுகள் & தீர்மானங்கள்:
இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 19 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொள்கை நோக்கியப் பயணம்: “எல்லோரும் தேர்தலையும் பதவியையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், திராவிடர் கழகம் எப்போதும் கொள்கையை நோக்கி மட்டுமே ஓடுகிறது” என்று வீரமணி பெருமிதம் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: நீட் தேர்வு தொடர்ந்து பல ஏழை மாணவர்களின் உயிர்களைப் பறித்து வருவதால், அதனை எதிர்த்துத் தொடர் போராட்டங்களை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 1000 இளைஞர்கள் வீதம், 16 முதல் 32 வயதுடைய இளைஞர் பட்டாளம் தயாராகி வருகிறது. தற்போது இலக்கைத் தாண்டி 1,706 இளைஞர்கள் (பெண்கள் உள்பட) இணைந்துள்ளனர்.
போதை ஒழிப்புப் பிரச்சாரம்: சமுதாயத்தைச் சீரழிக்கும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புடன் சேர்த்து, மனிதர்களைப் பிரிக்கும் மத போதை, சாதி போதை, பதவி மற்றும் அதிகார போதை ஆகியவற்றை ஒழிக்கவும் மாநிலம் தழுவியப் பிரச்சாரத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
ஆளுநர் மற்றும் காவல்துறை மீதான விமர்சனம்:
தொடர்ந்து பேசிய அவர், “காவல்துறை எப்போதும் தங்களை நடுநிலையாக வைத்துக் கொள்ளாமல், ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக’வே நடந்துகொள்கிறது. அதேபோல், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ஒரு தனி மனிதராக இருந்து கொண்டு இங்கு அரசியல் ஆழம் பார்க்க முயல்கிறார்” என்று விமர்சித்தார்.
மேலும், தற்போதைய தமிழக ஆட்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகித்தாலும், மாநில உரிமைகள் பறிக்கப்படும் போது அது ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகம் சுட்டிக்காட்டி கண்டிக்கத் தயங்காது என்றும் கி. வீரமணி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
