“தமிழகத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பேசப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் கூட வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதான் தவெக அரசின் ஊழல் ஆரம்பம்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையைத் தொடர்ந்து திண்டுக்கல்லிலும் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று வருகை தந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசைச் சாடி அவர் பேசிய விவரங்கள் பின்வருமாறு,

சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு – மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்
”ராணிப்பேட்டையில் 60 வயது மூதாட்டியை 23 வயது வாலிபர் ஒருவன் கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டுப் போயுள்ளது. ஆட்சியை சும்மா குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்குக் கிடையாது; மக்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டுவதுதான் உண்மையான எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமை.”
தவெக-வின் குதிரை பேரமும், அமைச்சர்களின் அராஜகமும்
”தமிழகத்தில் தவெகவினர் பல அத்துமீறல்களைச் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. சட்டமன்றத்தில் தங்களது ஆட்சிக்கு மெஜாரிட்டியை (பெரும்பான்மை) நிரூபிக்க வேண்டும் என்பதற்காகக் ‘குதிரை பேரம்’ பேசுவதை அவர்கள் முன்னெடுத்துள்ளனர் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.””அமைச்சர் விஸ்வநாதன் வானவியிடம் (பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் / பெண் பிரமுகர்) நடந்துகொண்ட விதம் எந்த விதத்தில் நியாயமானது? (மதுரையில் செய்தியாளர்களைத் தவிர்த்து ஓடியதைச் சுட்டிக்காட்டி). இன்னொரு அமைச்சரோ அங்குக் குழந்தையே இல்லாத இடத்தில், ‘மாத்திரையை நுணுக்குகிறேன்’ என்று சவடால் பேசுகிறார். இவர்களெல்லாம் எப்படி அமைச்சர்களாக நீடிக்கிறார்கள்?”
மாணிக்கம் தாகூருக்குக் கண்டனம்
”பெண்களுக்கு எதிராக ஒருவர் தவறு செய்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதைக் கூட எம்பியான மாணிக்கம் தாகூர் கண்டிக்கிறார் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள், எல்லோருடைய வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். தவறைத் தட்டிக்கேட்பதைக் கண்டிக்கும் அந்த கட்சியின் பார்வையும் கொள்கையும் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.”
சட்டம் தெரியாத சட்டத்துறை அமைச்சர்
”அரசியலமைப்புச் சட்டம் 167-வது பிரிவின்படி, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களின் அலுவல் சார்ந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு முழு அனுமதி உள்ளது. இதுகூட சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்குத் தெரியவில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றமே சொல்லியும், நீதிபதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்கிறார். நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத இவரெல்லாம் எப்படி சட்டத்துறை அமைச்சராக இருக்கத் தகுதி உடையவர்?” ”தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பேரம் பேசப்படும் இந்த தவெக அரசின் ஊழலை பாஜக சும்மா வேடிக்கை பார்க்காது” என நயினார் நாகேந்திரன் திண்டுக்கல்லில் அனல் பறக்கப் பேட்டியளித்துள்ளார்.
