“என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் (திமுக) கா.கருணாநிதி எச்சரித்துள்ளார்.
கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கா.கருணாநிதி, த.வெ.க நிர்வாகியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், திமுக சட்டமன்ற உறுப்பினர் கா.கருணாநிதியைத் தாக்கிப் பேசியிருந்தார்.

சர்ச்சையைக் கிளப்பிய த.வெ.க நிர்வாகியின் பேச்சு
அவர் பேசுகையில், “கோடி கணக்கில் செலவு செய்து வெற்றி பெற்றுள்ள திமுக கோவில்பட்டி எம்.எல்.ஏ-வை 300 ரூபாய் கூட சம்பாதிக்க விடமாட்டோம். ஓட்டுக்கு பணம் கொடுத்து, பின் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். மு.க.ஸ்டாலின் முதல்வராகி விடுவார், நாமும் அமைச்சராகி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார். ஏற்கனவே அப்படித்தான் இன்னொருவர் (முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ) அந்த எண்ணத்தில் இருந்தார், ஆனால் அவர் திரும்பவும் எங்களிடம் வந்துவிட்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியைச் சீக்கிரம் ராஜினாமா செய்ய வைத்து விடுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
”நான் திமுககாரன், மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” – எம்.எல்.ஏ பதில்
இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவில்பட்டி எம்.எல்.ஏ கா.கருணாநிதி கூறியதாவது:
”த.வெ.க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் என்னுடைய பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்ற தோனியிலும் பேசியுள்ளார். எனக்கு எதிராக இப்படிப் பேச அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க மிரட்டும் தோனியில் உள்ளது.
முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடமும் சிலர் பேரம் பேசியதாகவும், மிரட்டியதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதேபோன்றுதான் இந்த மிரட்டலும் இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகிறது. நான் திமுகவைச் சேர்ந்தவன், எதற்கும் அஞ்சுகிறவன் கிடையாது. பொதுவெளியில் பேசி என்னை களங்கப்படுத்திய த.வெ.க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உடனடியாக என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்.” நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் போட்டியிட்டார். இத்தேர்தலில் திமுக வேட்பாளர் கா.கருணாநிதி வெற்றி பெற்ற நிலையில், பாலசுப்பிரமணியன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் போட்டிக்குத் தற்போதும் இரு தரப்பினரிடையே அரசியல் மோதல் நீடித்து வருகிறது என்பதை இச்சம்பவம் காட்டுகிறது.
