HomeBreaking Newsகாங்கிரஸில் அனுபவமும் இளமையும் அவசியம்; உள்ளாட்சித் தேர்தலுக்குப் புதிய உத்திகள்: செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர்...

காங்கிரஸில் அனுபவமும் இளமையும் அவசியம்; உள்ளாட்சித் தேர்தலுக்குப் புதிய உத்திகள்: செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் உரை!

-

- Advertisement -

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமையில் முதலாவது செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
​இக்கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ்குமார், முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாணிக்கம் தாகூர்

we-r-hiring

விவாதிக்கப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்
​கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் பேசுகையில், இந்த செயற்குழு கூட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். அவை பின்வருமாறு:

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா:
வரும் ஜூலை 15-ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் எழுச்சியோடு எவ்வாறு கொண்டாடுவது என்பது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

​கிராம காங்கிரஸ் கமிட்டி பலப்படுத்துதல்:
கட்சியின் அமைப்பு ரீதியாக கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மாற்றமடைந்து வலுப்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் திரு. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இந்த முயற்சி, எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பலம் பெற அடித்தளமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படும் என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் உத்திகள்:
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை காங்கிரஸ் கட்சி எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் புதிய கூட்டணியில் புதிய யுக்திகளை, உத்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டுப் பேச்சு
​தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர், “காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. கட்சியில் ஒருபுறம் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் போல அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள்; மறுபுறம் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற புதியவர்களும் அமர்ந்திருக்கிறீர்கள். கட்சிக்கு அனுபவம், இளமை ஆகிய இரண்டுமே முக்கியம். நம்முடைய அனுபவம்தான் நமக்கு மிகப்பெரிய பலம்” என்று கிரிக்கெட் வீரர்களை ஒப்பிட்டு சுவாரஸ்யமாகப் பேசினார்.

ப. சிதம்பரம், செல்வப்பெருந்தகைக்குப் பாராட்டு
​மேலும், “கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நமது மூத்த தலைவர் ப. சிதம்பரம் முன்வைத்த கருத்துக்களும் ஆலோசனைகளும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளன. அதன்மூலம் நம் கட்சிக்கு எவ்வளவு பெருமை கிடைத்தது என்பதை நான் கண்கூடாகப் பார்த்தேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகளைப் பாராட்டிய அவர், “செல்வப்பெருந்தகை தலைவராக இருந்த காலகட்டத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நடைபெற்றன. காமராஜர் காலத்தில் வாங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை சட்டரீதியாக மீட்டெடுத்த பெருமை செல்வப்பெருந்தகையையே சேரும். அதுமட்டுமன்றி, கிராம காங்கிரஸ் கமிட்டி என்ற புதிய முன்னெடுப்பை எடுத்து அதற்காக அவர் தொடர்ந்து உழைத்தார்” என்று புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தற்போது புதிய உத்வேகத்துடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை நோக்கிச் செல்லத் தயாராகி வருவதை இந்த செயற்குழு கூட்டம் பிரதிபலிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ