தமிழக முதல்வர் விஜய் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான முதல் கட்டப் பேச்சுவார்த்தை, மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த அமித் ஷாவை, முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சந்திப்பின் பின்னணி
வழக்கமாக, இத்தகைய உயர்நிலை மாநாடுகளுக்கு முதலமைச்சர்கள் நேரடியாகச் செல்லாமல், அமைச்சர்களையோ அல்லது அதிகாரிகளையோ அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால், மாநில உரிமைகள், நிதிப் பகிர்வு மற்றும் நதிநீர் சிக்கல்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை நேரடியாக மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், முதல்வர் விஜய் முன்வந்து இந்தச் சந்திப்பை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய கோரிக்கைகள் – இந்தச் சந்திப்பின்போது முதல்வர் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
நீட் தேர்வு விலக்கு: தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation): மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு, தொகுதி மறுசீரமைப்பால் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.
நிதிப் பகிர்வு: மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) தென்மாநிலங்களின் பங்கு 30%-க்கும் அதிகமாக இருப்பதால், தகுந்த நிதிப் பகிர்வை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மண்டலக் குழு கூட்டம்: முதல்வர் விஜய் – அமித் ஷா முதல்முறை சந்திப்பு! முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த தமிழக அரசு! காவேரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இதர விவாதங்கள்!
தென்மண்டலக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் சதீஷன் உள்ளிட்டோர் அவரவர் மாநில நதிநீர் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா சந்திப்பு ரத்து!
மத்திய அமைச்சர் அமித் ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் பழைய நிர்வாகிகளை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளே இந்தச் சந்திப்பு ரத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சட்டமன்ற விவாதங்கள்
இதற்கிடையே, தமிழக சட்டமன்றத்தில் நீர்வளத்துறை மற்றும் உணவுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் அனல் பறந்தன. குறிப்பாக, ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தின. மேலும், எம்.எல்.ஏ.-க்களுக்குக் கார் வழங்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து, எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதில் இந்தச் சந்திப்பு எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
