திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
”இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தரிசன கட்டணம், சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்துவது தொடர்பாக, கோவிலின் தக்கார் அல்லது அறங்காவலர் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு இறுதி முடிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான அறிவிப்பு பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்கப் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே, திருச்செந்தூர் கோவில் தரிசன மற்றும் பூஜை கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், கோவிலின் தக்காராக அருள்முருகன் என்பவர் செயல்படத் தடை விதிப்பதோடு, முழுமையான அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட பின்னரே கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்.”
நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் தனது ஆட்சேபனையை ஏற்கனவே பதிவு செய்துள்ளார். ஜூன் 25-ஆம் தேதி அவர் வழங்கிய ஆட்சேபனை கடிதம், ஜூன் 27-ஆம் தேதி துறைக்குக் கிடைக்கப்பெற்றது. ஆனால், அவர் அவசர அவசரமாக ஜூன் 28-ஆம் தேதியே இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டண உயர்வு தொடர்பான விபரங்கள் மற்றும் விளம்பரத்தை இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Official Website) உடனடியாக வெளியிட வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கருத்துக்கள், ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கடைசித் தேதியை ஜூலை 21-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இந்த முக்கிய உத்தரவுகளுடன் நீதிபதிகள் இந்த பொதுநல வழக்கினை முடித்து வைத்தனர். இதன் மூலம் திருச்செந்தூர் முருகன் கோவில் கட்டண உயர்வு விவகாரத்தில் பக்தர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
