HomeBreaking Newsமுதல்வர் விஜய் - த்ரிஷா விமர்சன வீடியோ விவகாரம்: திமுக ஐடி விங் நிர்வாகி அன்பானந்தத்தின்...

முதல்வர் விஜய் – த்ரிஷா விமர்சன வீடியோ விவகாரம்: திமுக ஐடி விங் நிர்வாகி அன்பானந்தத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

-

- Advertisement -

தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில், திமுகவின் ஜென்-சி (Gen-Z) ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அன்பானந்தத்தின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய்

திமுகவின் ஜென்-சி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராகவும், சமூக வலைதள செயல்பாட்டாளராகவும் இருந்து வருபவர் அன்பானந்தம். இவர், தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியது குறித்து விமர்சனம் செய்து சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

we-r-hiring

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் அன்பானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அண்மையில் அவரது இல்லத்திலும் போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். இந்தச் சூழலில், கைது நடவடிக்கைக்குப் பயந்து அன்பானந்தம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் இதுபோல் பேச மாட்டார் – வழக்கறிஞர் வாதம்
​இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அன்பானந்தம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்

என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில்:
​”மனுதாரர் யாரையும் மிரட்டவில்லை, பொது அமைதிக்கு எதிராகச் செயல்படவில்லை. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக அவர் எந்தவொரு குறிப்பிட்ட கருத்தையும் பேசவில்லை. இச்சம்பவம் தொடர்பாக அவதூறு வழக்கு மட்டுமே தொடர முடியும். மனுதாரர் ஒரு பிரபல ஐடி (IT) நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது தவறை உணர்ந்துள்ளார். எதிர்காலத்தில் இது போன்ற கருத்துக்களைப் பேச மாட்டார் என்றும், இதற்காக மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளார் என்றும்” வாதாடினார்.

சமூகத்தின் மனசாட்சியைப் பாதிக்கிறது: நீதிபதி கடும் கண்டனம்
​இருப்பினும், மனுதாரரின் வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் தனது உத்தரவில், “மனுதாரரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவு என்பது சமூகத்தின் மனசாட்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளது. சமூக வலைதள கருத்து சுதந்திரம் என்பதை அவர் தனது முழுமையான உரிமையாக எடுத்துக் கொண்டுள்ளார்” என்று சுட்டிக்காட்டி, அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, அந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கில் அன்பானந்தம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

MUST READ