அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைப் பணத்தில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார், தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக அரசு ராமருக்கே துரோகம் இழைத்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ரூ.153 கோடி நன்கொடையில் ரூ.7.9 கோடி திருட்டு: SIT அதிர்ச்சி அறிக்கை
ராமர் கோயில் பிரதிஷ்டைக்குப் பிறகு, 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதிலுமிருந்து வந்த பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.153 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஆனால், இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) முதற்கட்ட அறிக்கையில், சுமார் ரூ.7.9 கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
“சிசிடிவி காட்சிகள் எங்கே?” – அகிலேஷ் யாதவ் கேள்வி
இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமாகப் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவை நோக்கிப் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். “பாஜக ராமருக்குப் மிகப்பெரிய துரோகத்தைச் செய்துவிட்டது. உலகெங்கிலும் உள்ள ராமர் பக்தர்களின் நம்பிக்கையை இந்தச் சம்பவம் உலுக்கியுள்ளது. கோயிலில் நன்கொடைப் பணம் எண்ணப்படும் அறையின் சிசிடிவி (CCTV) காட்சிகள் ஏன் திடீரென காணாமல் போயின? இதில் ஏதோ பெரிய சதி ஒளிந்திருக்கிறது. கோயில் பணம் ஏதேனும் அரசியல் நிதிக்கு (Political Funding) திருப்பி விடப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.”என அகிலேஷ் யாதவ், எஸ்பி தலைவர். மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தானாக முன்வந்து (Suo Motu) நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ராமரின் நாமத்தைச் சொல்லியே கொள்ளை” – மல்லிகார்ஜுன கார்கே சாடல்
இதேபோல், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் மத்திய அரசு மற்றும் கோயில் அறக்கட்டளை மீது கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். “ராமர் கோயிலில் சுமார் ரூ.5,000 கோடி வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளும் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களும் சேர்ந்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், ராமரின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளார்கள்.” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளாா்.
நீடிக்கும் அரசியல் பதற்றம்
பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையோடு தொடர்புடைய ராமர் கோயில் நிதி கையாடல் விவகாரம், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) பிடியில் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடிப் புகார்கள் உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பாஜாக மற்றும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்குவங்கம்: ஜூலை 24-ல் 3 இடங்களுக்கான மாநிலங்களவை இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
