மேற்கு ஆசியாவில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக, எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட ‘வீட்டிலிருந்து வேலை’ (Work From Home – WFH) உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.


கடந்த சில காலங்களுக்கு முன்பு, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவிய மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கிலும், டெல்லியில் உள்ள அரசு ஊழியர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது.
தற்போது உலகளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலி சீரடைந்து, நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டிற்கான அச்சம் நீங்கியுள்ளதால், அரசு நிர்வாகப் பணிகளை முழுமையாகச் செயல்படுத்தும் நோக்கில், அந்தச் சலுகையைத் திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனைத்து அரசு ஊழியர்களும் இனி வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும்.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அலுவலக வருகையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அனைத்துத் துறைகளும் வழக்கம் போல் முழுமையான ஊழியர்களுடன் செயல்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த முடிவானது, அரசு சேவைகளை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்கும் பணியை மேலும் துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
