வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கத் தடை விதித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.


அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கர்நாடகா மாநில பா.ஜ.க.வைச் சேர்ந்த எஸ். விக்னேஷ் ஷிஷிர் என்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகளை எழுப்பி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கத் தேவையான தகவல்கள் கிடைத்தால், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் (ராகுல் காந்தி தரப்பு):
உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் சட்டத்திற்கு முரணானவை. புகார் அளித்த நபரின் நம்பகத்தன்மை குறித்து எதையும் ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத நடைமுறையின் மூலம் நடத்தப்படும் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்த மனுதாரர் விக்னேஷ் ஷிஷிரின் நடவடிக்கைகளின் நேர்மைத்தன்மை என்ன? அவர் ராகுல் காந்திக்கு எதிராகத் தொடர்ந்து பல மனுக்களைத் தாக்கல் செய்து வந்தார் எனத் தெரிவித்தார்.
விக்னேஷ் ஷிஷிர் (எதிர் மனுதாரர்):
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தனது தரப்பை எடுத்துரைக்க உரிமை இல்லை என்று வாதிட்டார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு (சி.பி.ஐ தரப்பு):
இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதேவேளையில், ராகுல் காந்தி மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதால் அவற்றை முழுமையாக ஆராய வேண்டும் என்று தெரிவித்தார்.
நீதிபதிகளின் கேள்விகள்:
ஏதேனும் தீவிரமான குற்றச்சாட்டு இருக்கும் பட்சத்தில், சிபிஐ அல்லது அமலாக்கத் துறை ஏன் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும்?
விஷயம் அவ்வளவு தீவிரமானதாக இருந்தால், உங்கள் அமைப்பு ஏன் அமைதி காத்தது? நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் உங்களுக்குத் தேவையா? என கேள்வி எழுப்பினர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு:
இதையடுத்து, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த நிலை அறிக்கையையும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்யக்கூடாது எனவும், ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உள்ள சொத்து குவிப்பு புகார் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரிக்க தடை விதித்தும் உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பீகார் கோயிலில் துயரம்: நெரிசலில் சிக்கி 6 முதல் 7 பேர் உயிரிழப்பு!
