இந்தியத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படுவது குறித்துத் தொடர்ந்து எழுந்து வரும் சந்தேகங்கள், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இந்த விவகாரம் குறித்து முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞர் திரு. செந்தில்வேல் அவர்கள், மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய ஜனநாயகம் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும், ஆளும் வர்க்கமும் தேர்தல் ஆணையமும் இணைந்து மக்களின் தீர்ப்பைத் தீர்மானிப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


நிழல் உலகமாக மாறிய தேர்தல் ஆணையம்! தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், அதில் ஒளிவுமறைவற்ற தன்மையே இல்லை என்பதுதான் தற்போதைய பகிரங்கக் குற்றச்சாட்டு. இயந்திரங்கள் கொள்முதல் செய்வதில் பெல் (BEL) மற்றும் ஈசிஐஎல் (ECIL) நிறுவனங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் இடையே சுமார் 116 கோடி ரூபாய் அளவிற்கு நிதி முரண்பாடு இருப்பது எதைக் காட்டுகிறது? இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்கப்போவது யார்? என்று வழக்கறிஞர் செந்தில்வேல் கேள்வி எழுப்புகிறார்.
கணக்கில் வராத 20 லட்சம் இயந்திரங்கள்! தேர்தல் சமயத்தில் எந்தெந்த இயந்திரங்கள் எங்கே அனுப்பப்படுகின்றன, அவற்றின் சீரியல் எண்கள் என்ன, எத்தனை இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன, எத்தனை அழிக்கப்பட்டன என்பது குறித்து ஒரு துல்லியமான கணக்கு கூட தேர்தல் ஆணையத்திடம் இல்லை. கிருஷ்ணகிரியில் மின்னணு இயந்திர உதிரிபாகங்கள் குப்பையில் கிடந்த அவலத்தை நாம் பார்த்தோம். ஜனநாயகத்தின் ஆயுதங்களான இந்த இயந்திரங்களை குப்பையில் வீசும் அளவிற்கு இவர்களுக்குச் சட்டத்தின் மீதும், மக்களின் வாக்குகள் மீதும் அக்கறை இல்லாமல் போனது ஏன்?,.
யார் இந்த சாப்ட்வேர் நிபுணர்கள்? “வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் அப்படியே எண்ணப்படுவதில்லை; எங்கோ அமர்ந்திருக்கும் புத்திசாலித்தனமான சாப்ட்வேர் நிபுணர்கள் தான் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிடும் கருத்து, ஒட்டுமொத்த தேர்தல் முறையின் மீதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. களத்தில் இல்லாத கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் போது, பொதுமக்களுக்குச் சந்தேகம் எழுவதில் என்ன தவறு?.
காலாவதியான இயந்திரங்கள்; மீண்டும் வாக்குச்சீட்டே தீர்வு! அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மின்னணு இயந்திரங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பிவிட்டன. ஆனால், இந்தியா இன்னும் காலாவதியான இந்தச் சந்தேகத்திற்குரிய முறையை ஏன் இறுகப் பற்றிக்கொண்டுள்ளது? காங்கிரஸ் தொடங்கி பாஜக வரை, ஆளும் கட்சிகள் தங்களுக்குச் சாதகமான இந்தச் சிஸ்டத்தை மாற்றத் தயங்குவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்,.
மக்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கவும், தேர்தல் மீதான நம்பிக்கையை நிலைநாட்டவும், உடனடியாக EVM முறையை ஒழித்துவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஜனநாயக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
