அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார உறவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் சுமார் 20 பில்லியன் டாலரிலிருந்து 240 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மும்பையில் நடைபெற்ற இண்டோ-அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (IACC) தேசிய மாநாட்டில் பேசிய செர்ஜியோ கோர், வெறும் 20 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலத்திலேயே அமெரிக்கா – இந்தியா தரப்பு வர்த்தகம் சாதனைகளைப் படைத்துள்ளது. பதிவாகி இருக்கும் சுமார் 12 மடங்கு வளர்ச்சி தற்செயலாக நிகழ்ந்ததல்ல. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), தொழில்நுட்பம், விண்வெளித் துறை, பாதுகாப்பு அல்லது எரிசக்தி என முக்கிய துறைகளில் இருநாடுகளும், உலகின் மற்ற நாடுகளை விட முன்னணியில் நின்று மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற லட்சியம் இணையற்ற ஒன்றாகும்.
அதிபர் டிரம்பின் நம்பிக்கை & தொழில்நுட்பக் கூட்டு:
எங்களின் அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்; பதவியேற்ற முதல் நாளிலிருந்தே இந்த உறவை வலுப்படுத்துவதில் அவர் பெரும் கவனம் செலுத்தி வருகிறார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மாற்றியமைத்ததுடன், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி கண்டக்டர்ஸ், பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் வகையில் முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது என்றார்.
அதே போல டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்களில் 90 சதவீதம் அமெரிக்க நிறுவனங்களே, இந்த மாநாடு ஏன் இந்தியாவில் நடத்தப்பட்டது என்றால் வளர்ச்சிகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு முக்கிய சந்திப்பு புள்ளியாக இந்தியா திகழ்கிறது என்றும் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
உத்தரகண்ட் பிப்பல்கோட்டி சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு – தீவிர மீட்புப் பணி தொடக்கம்!
