காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் தரப்பு வாதங்கள் தீவிரமாக முன்வைக்கப்பட்டன.
விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு எப்போதுமே முழுமையாகப் பின்பற்றுவதில்லை.

தற்போதும் கூட, ஆணையம் உத்தரவிட்ட வினாடிக்கு 12,000 கன அடி நீரைத் திறக்காமல் கர்நாடகம் காலம் தாழ்த்தி வருகிறது. கர்நாடக அணைகளில் 76 சதவீத நீர் இருப்பு இருந்தும் நீரைத் திறக்க மறுக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பற்றாக்குறை காலங்களிலும் விகிதாச்சார அடிப்படையில் நீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், ஆணையம் உத்தரவிட்ட குறைந்தபட்ச அளவைக் கூட கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷ்யாம் திவான், “இந்த முறை கடுமையான வறட்சி நிலவிய நிலையிலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. முதலில் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், நாங்கள் அதைவிட அதிகமாகவே தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளோம்” என்றார்.
உடனே குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு, “கர்நாடகம் தாமாக முன்வந்து எந்த நீரையோ அல்லது ஆணையத்தின் உத்தரவையோ செயல்படுத்தவில்லை. கடவுளின் அருளால் அதிக மழை பெய்த காரணத்தினால் மட்டுமே உபரி நீர் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது” என்று வாதிட்டது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு வாதிடுகையில், “இன்று காலை நிலவரப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டதை விட அதிகமான நீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது; இந்த நிலை நாள் முழுவதும் தொடரும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அவையும் உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் புதிதாக விசாரிக்க வேண்டியது ஏதுமில்லை” என்று தெரிவித்தார்.
நீதிபதிகளின் அதிரடி கேள்வி:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடக அரசை நோக்கி ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பினர். “உங்கள் அணைகளில் அத்தனை நீரையும் சேமிக்க முடியவில்லை என்பதால் தான் நீங்கள் தற்போது தண்ணீரைத் திறந்து விட்டிருக்கிறீர்கள்; கடவுள் கொடுத்த மழைநீரை முழுமையாகத் தேக்கி வைக்க முடியாமல் திறக்கிறீர்கள், அப்படித்தானே?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், தற்போது மழை அளவு நல்ல நிலையில் இருப்பதால் இந்த விவகாரத்தை ஒரு வாரத்திற்குப் பிறகு விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு தரப்பில், “கர்நாடக அரசின் வாதங்களை இங்கு பதிவு செய்து வைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. மறுபுறம் கர்நாடக தரப்பில், “முடிந்தவரை தண்ணீரைத் திறக்க முயற்சிக்கிறோம். தமிழ்நாடு அரசுக்கு முழுமையாகத் தண்ணீரைத் தர வேண்டும் என்பதற்காகவே புதிய அணையைக் கட்ட முயல்கிறோம், ஆனால் அதற்குத் தடை போடுகிறார்கள்” என மேகதாது விவகாரம் எழுப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடக மற்றும் தமிழ்நாடு அரசுகள் தாக்கல் செய்த தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்வதாகத் தெரிவித்தனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை அதற்கேற்பக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, இந்த வழக்கை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை திறக்கப்பட்ட நீரின் விவரங்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
