கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடியை அடுத்த கல்லடியில், சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் கனமழை காரணமாக இன்று பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் மற்றும் வீடுகள் மண்ணில் புதைந்ததில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


தீவிரமடையும் மீட்புப் பணிகள்: மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்குப் பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF), தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் அவசரமாக விரைந்துள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் மண்ணிற்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, இடிபாடுகளில் சிக்கியிருந்த சில தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையே காரணம்: கடந்த சில நாட்களாக வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல இடங்களில் வரலாறு காணாத அளவிற்குப் பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதுவே இந்த திடீர் மண்சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):
மேப்பாடி – 226 மி.மீ
லக்கிடி – 210 மி.மீ
புத்துமலா – 202 மி.மீ
கல்லடி – 188 மி.மீ
நீராவரம் – 180 மி.மீ
அலட்டில் வட்டொலி – 172 மி.மீ
கன்ஹோம் – 170 மி.மீ
நீலிக்காப்பு – 160 மி.மீ
கப்பிக்களம் – 152 மி.மீ
வல்லம்தோடு – 147 மி.மீ
மங்கலசேரி மலை – 144 மி.மீ
மீனங்காடி – 143 மி.மீ
பாணாசுரா – 140 மி.மீ
எலம்பிலேரி – 21 மி.மீ
மீண்டும் திரும்பிய 2024-இன் கோர நினைவு: கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இதே மேப்பாடி அருகே உள்ள சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான மண்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்தப் பெருந்துயரச் சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள், தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு பெரிய மண்சரிவு விபத்து ஏற்பட்டுள்ளது வயநாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
