திருப்பூரில் பட்டா பெயர் மாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியைச் சரிசெய்ய 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட தொட்டிபாளையம் (பொறுப்பு) கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) அப்துல் ரகுமானை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
இதுகுறித்த விபரங்கள் வருமாறு:

திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி. பனியன் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு, தனது தந்தை கிருஷ்ணனுக்குச் சொந்தமான இடத்தை பட்டா மாறுதல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆன்லைனில் வந்த பட்டாவில் கிருஷ்ணனின் ‘மகன்’ நாகமணி என்று வருவதற்குப் பதிலாக, கிருஷ்ணனின் ‘மனைவி’ நாகமணி எனத் தவறாக அச்சிடப்பட்டு வந்துள்ளது.

3 முறை விண்ணப்பித்தும் மாறாத அவலம்:
இந்தத் தவற்றைத் திருத்துவதற்காக நாகமணி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மீண்டும் மீண்டும் அதே தவறுடன் 3 முறை பட்டா வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகமணி, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகத்தை அணுகியுள்ளார். அங்கிருந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து, தொட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) அப்துல் ரகுமானை நாகமணி நேரில் சந்தித்துக் முறையிட்டுள்ளார். அப்போது இத்தவற்றைச் சரிசெய்ய வி.ஏ.ஓ அப்துல் ரகுமான் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தர முடியாது என்று நாகமணி மறுத்தபோது, “இந்தப் பணம் எனக்கு மட்டுமல்ல, தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்” என வி.ஏ.ஓ கூறியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் பொறி:
லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகமணி, இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி, முதல்கட்டமாக 5,000 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நாகமணி, இன்று போலீஸார் இரசாயனப் பொடி தடவிக் கொடுத்த 5,000 ரூபாயுடன் தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றார்.
அங்கு வி.ஏ.ஓ அப்துல் ரகுமானிடம் நாகமணி பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீஸார் பாய்ந்து வந்து அப்துல் ரகுமானை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
ஒரே அலுவலகத்தில் 2-வது கைது:
இதற்கு முன்னதாக, இதே தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிகாரியாக இருந்த ஞானசேகரன் என்பவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் காரணமாக, தொங்குபாளையம் வி.ஏ.ஓ-வான அப்துல் ரகுமான் தொட்டிபாளையம் கிராமத்தை கூடுதலாகக் கவனித்து வந்தார். தற்போது அவரும் லஞ்சம் வாங்கி கைதாகியுள்ள சம்பவம் திருப்பூர் வருவாய்த்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
