நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி கூறியதாவது:


சமூக நீதிக்கு ஏற்படும் ஆபத்து
“என்.எல்.சி நிறுவனம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்றாலும், அதனை எதிர்த்து மக்களைத் திரட்டித் தொடர்ந்து போராடுவோம். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் போகும்போது, அங்கு லாபம் கொள்ளையடிக்கப்படுவதை விடப் பெரிய கொடுமை, சமூக நீதிக்கு ஏற்படும் கேடாகும்.
வங்கிகள், விமான நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால், தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாததால் சமூக நீதி முற்றிலுமாகப் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்படும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும்; அமெரிக்காவில் தனியார் துறையில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது போன்ற நடைமுறையை இங்கும் பின்பற்ற வேண்டும்.
தமிழக அரசு பங்குகளை வாங்க வேண்டும்
கடந்த 2006-ஆம் ஆண்டு இதே போன்ற சூழல் ஏற்பட்டபோது, தமிழகத்தில் நடத்தப்பட்ட தீவிரப் போராட்டத்தால் ஒன்றிய அரசு தன் முடிவைக் கைவிட்டது. பின்னர் 2013-இல் மீண்டும் என்.எல்.சி பங்குகளை விற்க முயன்றபோது, தமிழக அரசு தலையிட்டு 3.56 சதவீதப் பங்குகளை வாங்கியது.
அதேபோல, தற்போதும் ஒன்றிய அரசு விற்க முயலும் பங்குகளைத் தமிழக அரசு முன்வந்து வாங்க வேண்டும். இதற்கு நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டக் கூடாது. என்.எல்.சி பங்குகள் லாபம் தரக்கூடியவை என்பதால், நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசுக்கு இது ஒரு கூடுதல் வருவாயாகவே அமையும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூடுதல் பங்குகளைக் கேட்டுப் பெற முன்வர வேண்டும்.
ஒன்றிய அரசு தனது இந்தத் தனியார்மயமாக்கல் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், அடுத்தகட்டமாகப் போராட்டம் தீவிரமடையும்” என்று கி.வீரமணி எச்சரித்தார்.
