Homeசெய்திகள்க்ரைம்சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு 'நாய் கொல்லும் விஷ ஊசி' போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!

சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!

-

- Advertisement -

ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, தனது சொந்த மாமாவிற்கு நாய்களைக் கொல்லப் பயன்படுத்தும் விஷ ஊசியைச் செலுத்திக் கொலை செய்த மைத்துனனின் கொடூரச் செயல் நெல்லூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷ ஊசி

சொத்து மீது பேராசை
​ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், புச்சிரெட்டிபாலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் வேளாண்மை அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். ஸ்ரீஹரி தனது மைத்துனனான ஹரிகிருஷ்ணாவை மிகவும் நம்பியுள்ளார். இதனால், தனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவர் பெயரில் பதிவு செய்ததோடு, கணிசமான தொகையையும் அவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

we-r-hiring

இருப்பினும், முழுச் சொத்துக்களையும் அபகரிக்க வேண்டும் என்ற பேராசையால் மாமா ஸ்ரீஹரியைக் கொலை செய்ய ஹரிகிருஷ்ணா நீண்ட நாட்களாகத் திட்டம் தீட்டி வந்துள்ளான்.

திருப்பிக் கேட்டதால் வந்த வினை
​இந்தச் சூழ்நிலையில், வீடு கட்டுவதற்காகத் தான் கொடுத்த பணத்தையும், ஹரிகிருஷ்ணா பெயரில் எழுதிய சொத்துக்களையும் ஸ்ரீஹரி சமீபத்தில் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணா, தனது கொலைத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடிவு செய்தான்.

கடந்த ஜூன் 15 அன்று, ஸ்ரீஹரியை ஒரு காரில் பெஞ்சலகோனா கோவிலுக்கு ஹரிகிருஷ்ணா அழைத்துச் சென்றுள்ளான். சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பி வரும் வழியில், சாசர்லா மண்டலம் அருகே காரை நிறுத்தியுள்ளான். அங்கு, முன்கூட்டியே திட்டமிட்டபடித் தயாராக இருந்த தனது நண்பர்களான ரவீந்திரா மற்றும் யானதய்யா ஆகியோரின் உதவியுடன், ஸ்ரீஹரிக்கு வலுக்கட்டாயமாக நாய்களைக் கொல்லப் பயன்படுத்தும் விஷ ஊசிகளை இரண்டு முறை செலுத்தியுள்ளான். விஷம் உடலுக்குள் ஏறிய சில நிமிடங்களிலேயே ஸ்ரீஹரிக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

மாரடைப்பு என நாடகம்
​கொலைக்குத் பின், கோவிலில் இருந்து வரும் வழியில் ஸ்ரீஹரிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டது போல் நாடகமாடி, உறவினர்கள் அனைவரையும் ஹரிகிருஷ்ணா நம்ப வைத்துள்ளான். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராதவாறு, அவசர அவசரமாக இறுதிச் சடங்குகளை முடித்து, உடலையும் தகனம் செய்துள்ளான்.

காட்டிக்கொடுத்த பேராசை
​எல்லாம் திட்டமிட்டபடி முடிந்துவிட்டது என நினைத்த ஹரிகிருஷ்ணா, ஸ்ரீஹரியின் மீதமுள்ள சொத்துக்களையும் தன் பெயரில் எழுதிக் கொடுக்குமாறு, ஸ்ரீஹரியின் மனைவியும் (தனது சொந்தத் தங்கை) ஆன லாவண்யாவிடம் தொடர்ந்து சண்டையிட்டு மிரட்டல் விடுத்துள்ளான். கணவர் இறந்த துக்கத்திற்குள் அண்ணன் சொத்துக்காகச் சண்டையிடுவது லாவண்யாவிற்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
​இதையடுத்து, லாவண்யா நெல்லூர் எஸ்பி (SP) அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், இந்த வினோதமான மற்றும் கொடூரமான கொலைக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது.

போலீசார் நடவடிக்கை
​இந்தக் கொலை வழக்கில் ஹரிகிருஷ்ணாவின் நண்பர்களான ரவீந்திரா மற்றும் யனாதி ஆகிய இருவரைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இந்தக் கொடூரக் கொலையின் முக்கியக் குற்றவாளியான மைத்துனன் ஹரிகிருஷ்ணாவைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

MUST READ