சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கணவன் மற்றும் மனைவி பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, வீடும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவா, கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி மோனிஷா. இவர்களது குடும்பத்தினருக்கும், இவர்களின் வீட்டின் அருகே வசித்து வரும் கலையரசன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் மோனிஷாவின் தம்பியின் கையை கலையரசன் தரப்பினர் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மோனிஷா எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை வாபஸ் பெற மிரட்டல் – கத்திக்குத்து முயற்சி:
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரால் ஆத்திரமடைந்த கலையரசன், மோனிஷாவிடம் சென்று புகாரை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். தனது மனைவியை மிரட்டுவதைக் கண்டு கோபமடைந்த கணவர் சிவா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு கலையரசனை தாக்கச் சென்றுள்ளார்.
கல்வீச்சு மற்றும் பைக் எரிப்பு:
சிவா கத்தியுடன் வருவதைப் பார்த்த கலையரசன் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு, சிவா மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் சிவாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இத்துடன் நிற்காமல், கலையரசன் தரப்பினர் சிவாவின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். மேலும், வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து, அங்கிருந்த பீரோ மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, துணிமணிகளையும் வீசி எறிந்து நாசம் செய்தனர்.
கணவன், மனைவி மருத்துவமனையில் அனுமதி:
தங்களது உடைமைகளைச் சேதப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தச் சென்ற மோனிஷாவையும் அந்த கும்பல் இரக்கமின்றி தாக்கியுள்ளது.
நள்ளிரவில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் எண்ணூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் கிடந்த சிவா மற்றும் மோனிஷா ஆகிய இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் அரங்கேறிய இந்தத் தாக்குதல் மற்றும் பைக் எரிப்புச் சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
