Homeசெய்திகள்தமிழ்நாடுசெப்டம்பர் வரை நீடிக்கும் கோடைக்காலம்! சூப்பர் எல் நினோ எச்சரிக்கை – வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்...

செப்டம்பர் வரை நீடிக்கும் கோடைக்காலம்! சூப்பர் எல் நினோ எச்சரிக்கை – வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் அதிரடி தகவல்!

-

- Advertisement -

தமிழகத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து குளிரும், மழையும் இருக்க வேண்டிய ஜூலை மாதத்தில், நடப்பு ஆண்டில் வெயில் வரலாறு காணாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டு ‘சூப்பர் எல் நினோ’ தாக்கத்தால் செப்டம்பர் மாதம் வரை கோடைக்காலம் நீடிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ‘டெல்டா வெதர்மேன்’ ஹேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

சூப்பர் எல் நினோ

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவின் முழு விவரம் பின்வருமாறு:

தலைகீழாக மாறிய சூழல்:

பொதுவாக ஜூலை மாதத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் செய்திகளையும், அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் செய்திகளையும் தான் நாம் கேட்டிருப்போம். ஆனால், 2026-ல் சூழல் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

புதிய உச்சத்தைத் தொட்ட வெப்பநிலை (ஜூலை 2026):

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் வெயில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது:

  • வேலூர்: ஜூலை 13 அன்று அதிகபட்சமாக 42.6°C வெப்பம் பதிவாகியுள்ளது.

  • மதுரை: ஜூலை 14 அன்று 42.5°C வெப்பம் பதிவாகி, ஜூலை மாதத்திற்கான புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

  • ராமநாதபுரம் (தொண்டி): ஜூலை மாதத்தின் அதிகபட்சமாக 40.4°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

  • பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஜூலை மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக 33.6°C பதிவாகியுள்ளது. இது இதற்கு முன்பு 1914 ஜூலை 1-ஆம் தேதி பதிவான 33.3°C வெப்பநிலையின் 112 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது.

  • காவாளி (ஆந்திரா): இங்கு 42°C வெப்பம் பதிவாகியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பதிவாகாத ஒரு புதிய உச்சமாகும்.

  • மலைப்பிரதேசங்கள்: உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் வழக்கத்தை விட 6 முதல் 7°C வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை 39°C-ஐ கடந்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை!

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பகல்நேர வெப்பநிலை மேலும் அதிகரித்து, ஜூலை மாதத்தின் புதிய உச்சத்தைத் தொடும் அளவுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

விவசாயம் மற்றும் குடிநீர் பாதிப்புகள்:

ஏற்கனவே மேட்டூர், முல்லைபெரியாறு போன்ற முக்கிய நீர்நிலைகளில் இருந்து பாசனத்திற்குப் போதிய நீர் திறக்கப்படாத சூழலில், இந்த நீடித்த வெப்பம் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் ஏற்படும் முக்கியப் பாதிப்புகள்:

  1. குறுவை சாகுபடி பாதிப்பு: குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் பயிர்களில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.

  2. நிலத்தடி நீர் உப்பாதல்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீரில் உப்பின் தன்மை தென்படத் தொடங்கியுள்ளது. இதனால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  3. நீர்நிலைகள் மாசுபடுதல்: குளம், குட்டைகளில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்து வருவதுடன், எஞ்சியிருக்கும் நீரும் மாசடைந்து வருகிறது.

அரசுக்கு கோரிக்கை:

உருவாகி வரும் எல் நினோ தாக்கத்தால் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய அடுத்த 3 மாதங்களும் வழக்கத்தை விட வெப்பமான மாதங்களாகவே அமையக்கூடும். இந்த ஆண்டு ‘சூப்பர் எல் நினோ’ தாக்கத்தால் செப்டம்பர் வரை நீடித்த கோடைக்காலத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம்.

எனவே, இந்த சூப்பர் எல் நினோ நிகழ்வை அரசு மிகவும் கவனத்துடன் கையாண்டு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயப் பாதிப்புகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ஹேமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

MUST READ