தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள சூழலில், தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு விதிகளைத் தளர்த்தி மாற்றுப்பணி (Deputation) வழங்கப்பட்டிருப்பது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ‘எமிஸ்’ (EMIS) இணையதளம் வழியாக ஆன்லைனில் வெளிப்படையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 15 முதல் 22 வரை நடைபெற்று, ஜூலை 1-ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து, ஜூலை 6-ம் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாக ஒட்டுமொத்த கலந்தாய்வு செயல்முறைகளும் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரின் மனைவிக்கு சிறப்புச் சலுகையா?
பொது கலந்தாய்வு முடங்கியுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில், அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு மட்டும் கலந்தாய்வே இல்லாமல் பணியிட மாறுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மனைவி பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது மனைவிக்கு பல்லாவரத்திலிருந்து சென்னை நகரின் மையப்பகுதியான திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் குற்றச்சாட்டு; அதிகாரிகள் விளக்கம்
பொது கலந்தாய்வு நடக்கும் காலங்களில் தங்களுக்குச் சாதகமான மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அதிகாரிகள் வெளிப்படையாகக் காட்டுவதில்லை என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வாறு மறைக்கப்படும் இடங்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் அல்லது பண பலம் படைத்தவர்களுக்கும் பின்வாசல் வழியாக ஒதுக்கப்படுவதாக அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மறுபுறம், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், “இது நிரந்தரப் பணியிட மாறுதல் அல்ல; ‘டெபுடேஷன்’ எனப்படும் தற்காலிக மாற்றுப்பணி மட்டுமே. ஒரு குறிப்பிட்ட பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும்போது அல்லது கடுமையான மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மாற்றுப்பணி வழங்குவது வழக்கமான ஒன்றுதான்” என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், உண்மையான மருத்துவத் தேவைக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் சாதாரண ஆசிரியர்களுக்குக் கிடைக்காத ‘டெபுடேஷன்’ சலுகை, அமைச்சரின் மனைவி என்பதால் சில நாட்களிலேயே வழங்கப்பட்டிருப்பது முறைகேடான முன்னுதாரணம் என்று ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
