ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட ‘லுக் அவுட்’ நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்த ஐந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், எந்தவொரு பணிகளும் நடைபெறாத நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் தொகை முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகள் திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து விசாரணையைத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 25-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, துறை அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனை நடந்த அடுத்த நாளே ஏ.வ.வேலு இதய சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவர் நாட்டை விட்டு வெளியேறியதால், அவரைத் தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் (Lookout Notice) பிறப்பித்தனர்.
உயர் நீதிமன்ற நிபந்தனை மற்றும் டெல்லி நகர்வு
தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி ஏ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஜூலை 15-ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு ஏ.வ.வேலு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் வைக்காத கோரிக்கையின் மீது (லுக் அவுட் நோட்டீஸ் தடை) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணை தொடங்கியவுடனேயே அவர் சிங்கப்பூருக்குச் சென்று தங்கிவிட்டார்” என்று வாதாடினார். அதற்குக் குறுக்கிட்ட நீதிபதிகள், “சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் தானே உள்ளது? ஏ.வ.வேலு தற்போது நாட்டிற்குத் திரும்பிவிட்டாரே, அவரிடம் விசாரணை நடத்துவதில் உங்களுக்கு இப்போது என்ன பிரச்சினை இருக்கிறது?” என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.மேலும், எதிர்மனுதாரரான ஏ.வ.வேலு தரப்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கை விசாரிப்பதில் உங்களுக்கு ஏதேனும் முட்டுக்கட்டை இருக்கிறதா என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
பாஸ்போர்ட் விவகாரமும் பழிவாங்கும் அரசியலும்
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஏ.வ.வேலு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அவர்தான் ஒத்துழைப்பதாகக் கூறுகிறாரே, பின்னர் ஏன் தனியாக உத்தரவிட வேண்டும்?” என்று கூறி லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், “ஏ.வ.வேலு அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று மற்றொரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “இது போன்ற கோரிக்கைகளை நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திடமே முன்வையுங்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தினர்.
அப்போது ஏ.வ.வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “நான் ஒரு முன்னாள் அமைச்சர். தமிழ்நாட்டில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, அரசியல் ரீதியாக நடத்தப்படும் பழிவாங்கும் நடவடிக்கையின் தொடக்கம்தான் இந்த வழக்கு” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர். இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அமலில் உள்ள சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தள்ளுபடி உத்தரவு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பின்னடைவாகவும், முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்குப் பெரும் நிம்மதியாகவும் பார்க்கப்படுகிறது.
