
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் திட்டங்களை முறைப்படுத்துவதிலும், கட்டுமான நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே எழும் தொழில்முறைப் புகார்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதிலும் டி.என்.ஆர்.இ.ஆர்.ஏ (TNRERA) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தற்போது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) புதிய தலைவராக ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.பணீந்திர ரெட்டியை நியமித்து அதிகாரப்பூர்வ உத்தரவைத் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்தவும், வீடு வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தில் நிலவி வந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த முக்கிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தலைவர் நியமனத்துடன் சேர்த்து, இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை முழு வீச்சில் கொண்டு செல்வதற்காக இரண்டு புதிய முக்கிய உறுப்பினர்களாக, கடந்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பொதுச் செயலாளர் / ஐ.ஏ.எஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர் இந்த ஆணையத்தின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சட்ட ரீதியான விவகாரங்களைக் கையாள்வதற்கும், நுகர்வோர் புகார்களைத் தீர்ப்பதற்கும் ஏதுவாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நசீர் அகமது மற்றொரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைவராகப் பணீந்திர ரெட்டி நியமனம்
1990ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கே.பணீந்திர ரெட்டி, தனது 35 ஆண்டு பணிக்காலத்தில் உள்துறை, நிதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மற்றும் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் ஆவார். நிர்வாகத் துறையில் இவருக்கு இருக்கும் நீண்ட கால அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இவரை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) புதிய தலைவராக நியமித்துள்ளது.
