சென்னை மாநகரில் ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்விதத் தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், மாற்று வாகனங்கள் மூலம் விநியோகப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது ஒப்பந்த வாகனங்கள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பால் மற்றும் பால் பொருட்கள், 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கமாக இயக்கப்படும் 31 ஒப்பந்த வாகனங்களில் 5 வாகனங்கள் மட்டுமே அன்றைய தினம் இயக்கப்பட்டன.
இதையடுத்து, பொதுமக்களுக்கான பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஆவின் நிர்வாகம் உடனடியாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆவினுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் காரணமாக, சென்னையில் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அக்டோபர் 21ஆம் தேதி ஆவின் நிர்வாகத்தைச் சந்தித்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்த வாகன உரிமையாளர்கள், போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் வாகனங்களை இயக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 22ஆம் தேதியான இன்று முதல் ஒப்பந்த வாகனங்கள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஐந்து நாட்களாக ஆவின் நிர்வாகம் மேற்கொண்ட மாற்று ஏற்பாடுகளால் சென்னை மாநகரில் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும், பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் ஆவின் மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
