“மாணவர்கள் மீது மொழியை ஒரு சுமையாகத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது; அதேநேரம் ஒன்றிய அரசை எதிர்த்து எதுவுமே பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசிடம் நாம் எதையும் எதிர்பார்ப்பது தவறு” என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (ஜூலை 15) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மொழித் திணிப்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய விவரம் வருமாறு,
இருமொழிக் கொள்கையே திமுகவின் நிலைப்பாடு
”திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே இருமொழிக் கொள்கையில்தான் மிகத் தெளிவாக உள்ளது. மொழி என்பது எந்தவொரு குழந்தையின் மீதும் ஒரு பாரமாகவோ அல்லது சுமையாகவோ மாறிவிடக் கூடாது. இன்றைய உலகளாவிய சூழலில், பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகள், அதைத் தேடிப் படிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும், வழிமுறைகளும் தாராளமாக உள்ளன. ஆனால், அதைப் பாடத்திட்டத்தின் வழியாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கூடுதல் சுமையாக மாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குழந்தைகளிடம் அவநம்பிக்கையை உருவாக்கும் பாஜக
ஒன்றியத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வருகிறது. இது பள்ளிச் சிறுவர்களிடம் தேவையற்ற மனச்சோர்வை உண்டாக்குவதோடு, அவர்கள் மனதில் ஒருவித அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளை வற்புறுத்தி மும்மொழிக் கொள்கையை அவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பதைத்தான் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தவெக அரசைச் சாடிய கனிமொழி
தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது ஒன்றிய அரசை எதிர்த்து எதுவுமே பேசுவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது போல் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டில் இருப்பவர்களிடம், நாம் நாட்டின் முக்கியப் பிரச்சினைகளுக்காகவோ அல்லது மாநில உரிமைக்காகவோ குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதே முற்றிலும் தவறானது” என்று கனிமொழி எம்பி செய்தியாளர்கள் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
