தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஷ்வர்யா லக்ஷ்மி, நாசர், கௌதம் ராம் கார்த்திக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படமானது வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து வெளியான ஜிங்குஜா பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த நிலையில் தான் அடுத்த வாரம் அதாவது மே 16 அன்று தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்தியா – பாகிஸ்தான் முதல் காரணமாக இந்திய எல்லையில் நிலவும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.