
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த 70 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 நாள் தொடர் சிகிச்சை:
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக வி.எஸ்.பாபு சென்னை எம்ஜிஎம் (MGM) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளியாகவிருந்த சூழலில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
ஆதவ் அர்ஜுனா இரங்கல் மற்றும் பேட்டி
வி.எஸ்.பாபுவின் உடல்நிலை மற்றும் மறைவு குறித்துத் தகவலறிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எங்கள் தலைவரின் நம்பிக்கையும் அன்பையும் பெற்றவர் வி.எஸ்.பாபு. எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான அவரது உயிர் பிரிந்துள்ளது” என உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தமிழக வெற்றிக் கழகத்தின் கடினமான காலகட்டங்களில் எங்களுடனும், தலைவருடனும் இணைந்து பணியாற்றியவர். வடசென்னையின் முகமாகவும், அந்தப் பகுதியின் மொழியையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவராகவும் அவர் திகழ்ந்தார்” எனப் புகழஞ்சலி செலுத்தினார்.
வடசென்னை மற்றும் கொளத்தூர் பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் மறைவு, அரசியல் வட்டாரத்திலும் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
