மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்..
ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் , கடந்த மாதம் 24ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நடைபயணத்தில் பங்கேற்ற தனது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கு விதமாக சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில், கமல்ஹாசன் விருந்து வழங்கினார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “பா.ஜ.க மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். அதனை நாம் எதிர்க்க வேண்டும். அதன் காரணமாகவே நாம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றோம். மதத்திற்கு எதிரான அரசியலை தடுக்க வேண்டும், ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் பாரத் ஜோடோ அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். அதற்காக அனுமதிகள் பெறுவதற்காக தொடர்பாக பேசி வருகிறோம்.மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சென்னையில் ஜல்லிக்கட்டுகாக நடத்திய போராட்டம் நான் இன்னும் மறக்கவில்லை. அதே இடத்தில் நடத்த முடியாது; பல சிக்கல் இருக்குது; நகரத்தில் இருப்பவர்களுக்கு ஜல்லிக்கட்டு புரிய வேண்டும். அதற்காக சென்னையில் வைக்க வேண்டும்.
தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம்,பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் வந்துள்ளது.
இதை மாற்ற சொல்லுவதற்கு அவர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதை புவி என மாற்றி கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் ‘ஏ’ சொன்னால் ‘ஏ’ சொல்லுங்கள், ‘பி’ சொன்னால் ‘பி’ சொல்லுங்கள். என்னை பின்பற்றுங்கள். உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன். எனவே, தலைமை கட்டளைகளை, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பாரா முகத்தோடு இருக்க மாட்டேன்.