பாமக, விஜய், சீமான் கூட்டணி அமைந்தால், தமிழ்நாட்டில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று முடிவு செய்யும் இடத்தில் அவர்கள் வருவார்கள் என்று பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி கணக்குகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026ல் திராவிட மாடல் அரசின் 2.O லோடிங்… என்று சொல்லியுள்ளார். தற்போது நடைபெற்றது கிட்டத்தட்ட முழுமையான கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் வகையிலும், தான் சார்ந்த கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையிலும் எந்த ஒரு தலைவரும் பினிஷிங் டச் தருவது வழக்கம். அதற்கு கூட்டணி பலமும் ஒரு காரணம். ஆளுங்கட்சி என்கிற இன்னொரு பலம் கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருக்கலாம். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று இது முதல் ஆட்சி. இரண்டாவது ஆட்சியில் நான் இன்னும் சில நல்ல திட்டங்களை தருவேன் என்கிறார். அப்படி 2வது முறை மக்கள் ஸ்டாலினை தேர்வு செய்தால், அவர் அதிகாரிகளின் பிடிக்குள் போகக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக அப்படி போய்விட்டார். அந்த சூழலிலும் பல நல்ல விஷயங்கள் நடைபெற்றுள்ளன. இவ்வளவு நல்லது நடைபெறுகிற ஆட்சியில் இத்தனை தவறுகள் நடக்கனுமா? என்று சொல்கிற அளவுக்கு சில தவறுகள் நடைபெற்றுள்ளன. 2.Oல் இந்த விஷயங்களுக்கு இடம் தராமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது.
மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு போன்றவர்கள் சொத்துக்குவிப்பு வழக்குகளில் விடுவிக்கப்பட்டது ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது திமுகவுக்கு நெருக்கடியானதுதான். திமுகவின் தளகர்த்தர்கள் என்று சொல்லப்படும் அமைச்சர்களுக்கு மெண்டல் டார்ச்சர் ஆகும். 6 மாதத்தில் விசாரணை முடிக்க வேண்டும் என்றால், அது 9 மாதங்கள் கூட ஆகலாம். கிட்டத்தட்ட தேர்தல் நேரம் வந்துவிடும். அந்த மாவட்ட செயலாளராக இருக்கும் அமைச்சர், வேட்பாளர் தேர்வு, தனது தொகுதியை வலுப்படுத்துவது, அதற்கான பணத் தேவைகள், முன்னேற்பாடுகள் என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கிறபோது முக்கியமான அமைச்சர்கள் இந்த வழக்குகளில் சிக்கியுள்ளது திமுகவுக்கு நெருக்கடிதான். தினசரி விசாரணை என்றால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நாள்தோறும் ஆஜராக வேண்டும்.
அமைச்சரவை மாற்றம். பொன்முடி மீதான நடவடிக்கை என்பது முதலமைச்சர் சரியான நேரத்தில் சாட்டையை எடுத்தார். சர்வாதிகாரியாகவும் மாறினார். தேர்தல் வருகிற நேரத்தில் ஒரு மூத்த அமைச்சர் பொதுமேடையில் இப்படி பேசினால் தலைவர் என்ன செய்வார் என்பதுதான் நடவடிக்கை. தேர்தல் வருகிறபோது இந்த வீடியோ வெளியானால் அதை திமுக எதிர்கொள்வது கடினமாகும். மிகப் பெரிய சங்கடத்தில் போய் விடும். இப்படி ஒரு சங்கடமான நிலைக்கு கட்சியை ஆளாக்கிய பொன்முடியை வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று, அவரை போன்றவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக நடவடிக்கை எடுத்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறை வாதங்களை பார்த்தால் எந்த அளவுக்கு தனி மனிதர் மீதான தாக்குதல், அரசியல் பழிவாங்குதல் என்கிற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள வாதமாகும். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுக்கிறபோது அமைச்சராகக் கூடாது என்று குறிப்பிட வில்லை. அது நாங்கள் செய்த தவறுதான் என்று நீதிபதி சொல்கிறார். ஆனால் தீர்ப்பில் அப்படி சொல்ல முடியாது. அரசியலமைப்பு சட்டத்தில் அதற்கு அதிகாரம் இல்லை.
அமைச்சர்கள் நியமனம் என்பது, முதலமைச்சருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரமாகும். 48 மணி நேரத்தில் எப்படி அமைச்சர் ஆக்கலாம் என்று விமர்சிக்கிறார்கள். அதுதான் சிலரது ஈகோவை சீண்டிவிட்டது. இதில் செந்தில் பாலாஜியை மட்டும் பார்க்காதீர்கள். நாளைக்கு எடப்பாடி, தங்கமணி, வேலுமணி என எல்லோருக்கும் வரும். இந்த வழக்கில் 4 விசாரணையில் ஜாமினை ரத்து செய்ய முடியாது என்று சொன்ன நீதிபதி ஓகா 5வது விசாரணையில் தான் வேறு வார்த்தை சொன்னார். அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா, நீங்கள் அடுத்த மாதம் ஓய்வுபெற்ற உடன் ஜூன் மாதத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி விடுவார். என்னுடைய யூகத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக அமைச்சரவையில் ஒரு இடம் காலியாக வைக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நேரம்தான் தவறானது என்று சொன்னேன். அதிமுக – விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது அமித்ஷாவுக்கு தெரிந்து விட்டது. விட்டால் அதிமுகவை பிடிக்க முடியாது என்று தெரிந்ததால்தான் அமித்ஷா அவ்வளவு அவசரமாக வந்து கூட்டணியை உறுதி செய்தார். போக போக இரு கட்சிகள் இடையே உள்ள முரண்பாடுகள் குறைந்துவிடும். எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் போட்டுள்ளார். கிப்ட் எல்லாம் கொடுத்து அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இது மட்டும் போதாது, ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர்கள் போன்றவர்களை உணர்வு ரீதியாக எடப்பாடி பழனிசாமி ரீச் ஆக வேண்டும். இன்றைக்கு இருக்கிற அதிமுக – பாஜக கூட்டணி போதுமானது அல்ல. பாமக, தேமுதிக வந்தால், வடமாவட்டங்களில் பலமாக உள்ளது. டெல்டாவில், தென் மாவட்டங்களில் என்ன செய்வீர்கள். தினகரன், ஒபிஎஸ் பற்றி எடப்பாடி என்ன சொல்கிறார். எடப்பாடி, தினகரன் எப்படி ஜெல் ஆவார்கள். இருவரும் வெவ்வேறு புறம் இருந்தால் கூட்டணியால் எந்த பிரயோஜனமும் கிடையாது.
அதிமுக – பாஜக கூட்டணியால் பாஜகவுக்கு தான் லாபம். ஒன்றுபட்ட அதிமுக என்றால் அதிமுகவுக்கு லாபம். ராமதாஸ், பிரேமலதா சேர்ந்துவிட்டார்கள். ஏதோ விஜய் சில வார்த்தைகளை விடுகிறார். அவரும் வந்துவிட்டால் அது பலமான கூட்டணியாகும். நேற்றைய கூட்டத்தில் எந்த சமரசத்திற்கும் நான் ஆட்பட மாட்டேன். ஆனால் மக்களுக்கு ஒரு நல்லது என்றால் எந்த அளவுக்கும் இறங்கிவரத் தயார் என்று சொல்கிறார். இதற்கு கூட்டணியை தவிர வேறு ஆப்ஷன் இல்லை. அப்போது அவரது மனதில் ஏதோ சில ஆப்ஷன் ஓடிக்கொண்டிருக்கிறது. திமுகவை வீட்டிற்கு அனுப்புவது தான் மக்களுக்கு செய்கிற ஒரே நல்லது. அதற்காக நான் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்கிற முடிவை விஜய் எடுத்தார் என்றால்? தயக்கத்தை தள்ளிவைத்து விட்டு அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அல்லது சீமான், எப்போதும் விஜயுடன் சண்டை போடுகிறார். ஆனால் தம்பி விஜய் என்கிற வார்த்தையை இன்று வரை விடுவதில்லை. அவர்கள் இருவரும் சேர்கிறார்களா? அல்லது ஒரு புதுமுயற்சி எடுத்து பார்ப்போம் என்று ராமதாஸ் அங்கு போய் சேர்ந்தார் என்றால் ராமதாஸ், விஜய், சீமான் என்று 3 பேரும் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதை பரிசோதித்து பார்ப்போம் என்று ராமதாஸ் நினைத்தால், அது சாத்தியம் தான். அவர்கள் 3 பேரும் சேர்ந்து திமுக, அதிமுகவில் யாரோ ஒருவரை முழுமையாக காலி செய்வார்கள். தொகுதிக்கு தொகுதி மாறுபடலாம். அல்லது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்கிற இடத்திற்கு அவர்கள் வரலாம். அவர்கள் ஒரு 30 – 40 தொகுதிகள் வரை வென்றார்கள் என்றால் ஆட்சியை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் அவர்கள் இருப்பார்கள். அப்போது கூட்டணி ஆட்சி. விஜய், அன்புமணி, சீமான் ஆகியோருக்கு துணை முதலமைச்சர் பதவி கேட்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்