ஆளுமைமிக்கத் தலைவர்கள் இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகக் காவல்துறையை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறதா? தவெக ஆட்சியிலும் தொடரும் அடக்குமுறைகள் எழுப்பும் கேள்விகள்.


மாற்றமின்றித் தொடரும் அடக்குமுறைகள்
“அட, ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே…” என்ற அதிருப்திக் குரல்கள் தமிழகமெங்கும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தவெக ஆட்சியில் காவல்துறை நடத்தும் ‘காட்டு தர்பார்’ எவ்விதத் தடங்கலுமின்றித் தொடர்வது தவெகவுக்கு வாக்களித்த மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்களைச் சமூக விரோதிகளைப் போலத் தமிழகக் காவல்துறை கையாள்கிறது. டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் தாக்கமாகத் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கடந்த சில நாட்களாக மாணவர்கள் தன்னிச்சையாகப் போராடி வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்காமல் அமைதியாகப் போராடும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதும், தாக்குவதும் ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.
நீட் பாதிப்பால் அனிதா மரணித்த போது அவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவளித்த விஜய், இன்று முதல்வராக இருக்கும் ஆட்சியில் மாணவர்களுக்கு இந்த நிலைமையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யின் பாதுகாப்பற்ற உணர்வும் டெல்லி அச்சமும்
தவெக அரசு தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி செய்வதால், அதனிடம் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு நிலவுகிறது. பிரதான திராவிடக் கட்சிகள் பாஜகவின் ஆதரவோடு ஆட்சியைக் கவிழ்க்க முயலக்கூடும் என்ற அச்சத்தால், மத்திய பாஜக அரசைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற போக்கிலேயே முதலமைச்சர் விஜய் ஆட்சி நிர்வாகம் செய்து வருகிறார்.
டெல்லியில் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து மாணவர்கள் பேரணி நடத்தியபோது அவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டு முதலமைச்சர் விஜய் துடிக்கவில்லையா? “மத்திய அரசு இவர்களை அழைத்து பேச வேண்டும்” என்று கூடவா அவருக்குப் பேசத் தோன்றவில்லை?
ராகுல் காந்தி கைதான போது கூடத் தாமதமாகவே கண்டன அறிக்கை தந்த விஜய், பட்டும்படாமலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஒதுங்குகிறார். எந்த இளைஞர் சக்தியால் ஆட்சிக்கு வந்தாரோ, அந்த இளைஞர்கள் முன்னிலையில் அதிகாரப் பற்றின் காரணமாக முதலமைச்சர் விஜய் சுயமற்றுத் தோன்றுவது பரிதாபத்திற்குரியது.
மறுபுறம், பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன் போன்ற திரைக் கலைஞர்கள் நீலம் பண்பாட்டு இயக்கம் சார்பில் தெருவில் இறங்கிப் போராடும் போது, “நிஜக் கதாநாயகன் யார்?” என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு முதல் தூத்துக்குடி வரை: கையை மீறிய காவல்துறை
கடந்த பத்தாண்டுகளாகவே யார் முதலமைச்சராக இருந்தாலும், மக்கள் போராட்டங்களை முரட்டுத்தனமாக ஒடுக்குவதில் காவல்துறை மாறவே இல்லை. கலைஞர், ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு காவல்துறையைத் தன் முழுப் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகித்த முதலமைச்சர் ஒருவரைக் கூடத் தமிழகம் பார்க்கவில்லை.
ஜல்லிக்கட்டுப் போராட்டம்: தமிழக மக்களின் ஏகோபித்த ஒற்றுமையைக் கண்டு பதைபதைத்த டெல்லி ஆட்சியாளர்கள், போராட்டத்தின் முடிவில் குடிசை வீடுகளுக்குக் காவல்துறையினரே தீ வைத்துப் போராட்டக்காரர்கள் மீது பழிபோட முயன்றபோதே இது அம்பலமானது. அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுங்கச் சொல்லிவிட்டு, உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூட்டைத் “தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்” என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதே, தாம் அதிகாரமற்ற ஒரு பாவை தான் என்பதற்கான வாக்குமூலமாகும்.
ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்ந்த அதே அவலம்
அடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் நிலைமை மாறவில்லை. குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி. ஆவணப்படத்தைத் தன் கைபேசியில் பார்த்த சி.பி.எம். கவுன்சிலர் கைது செய்யப்பட்டது முதல், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தின் போது கிளம்பிய அறச்சீற்றத்தை அடக்கப் போராட்டக்காரர்கள் மீதும், போராடாத தலித் இளைஞர்கள் மீதும் காவல்துறை ஏவிய வன்முறை வரை இது தொடர்ந்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றவாளி எனக் சுட்டிக்காட்டிய அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு மாறாகத் திமுக அரசு பதவி உயர்வு வழங்கியது. வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களையே பலிகடாவாக்கத் துடித்தது.
இதைக் கண்டு கொந்தளித்த விசிக தலைவர் திருமாவளவன், “தமிழகக் காவல்துறைக்குத் தலைமை தாங்குவது ஸ்டாலினா? அமித் ஷாவா?” என மேடையில் முழங்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இத்தகைய காரணங்களால்தான் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர்.
ஆளுமையற்ற தலைவர்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும்
ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறை செயல்பட்ட விதத்தில் இம்மியளவும் மாற்றமின்றித் தவெக ஆட்சியிலும் நடந்து கொள்கிறது என்றால், டெல்லி புதிய ஆட்சியாளரையும் பதுமையாக வைத்துக்கொண்டு காவல்துறையைக் கட்டுப்படுத்துகிறது என்றுதான் பொருளாகும்.
தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பாஜக அரசு பெருமளவில் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டது. அதிகாரிகளே மாநில முதலமைச்சர்களை வழிநடத்துகிறார்களே அன்றி, மாநில முதலமைச்சர்கள் அதிகாரிகளை வழிநடத்துவதில்லை.
அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வரிசையில் தற்போது முதலமைச்சர் விஜய்யும் இணைந்துள்ளார்.
மத்திய ஆட்சியாளர்களின் அதிகாரக் குவிப்பையும், மாநில அரசுகள் சுயமாகச் செயல்பட முடியாத நிலைமையையும் புரிந்துகொண்டு, கட்சி சார்புகளைக் கடந்து மக்களாகிய நாம் ஜனநாயத்தை நிலைநாட்ட மக்கள் சக்தியை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாதது.
